வாக்குச்சீட்டு முறையில் 2019-ம் மக்களவைத் தேர்தல்: 17 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனுஅளிக்க முடிவு..


2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலை வாக்குச்சிட்டு மூலம் நடத்த வேண்டும் என்று 17 எதிர்க்கட்சிகள் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பாக அடுத்தவாரம் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து விவாதிக்க இருக்கின்றன.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தெரீக் ஓ பிரையன் நிருபர்களிடம் இன்று டெல்லியில் கூறுகையில், “ 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன.

இது தொடர்பாக பேச அடுத்தவாரம் கூட இருக்கிறோம். தேர்தல் ஆணையத்திடம் சென்று வரும் மக்களவைத் தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வலியுறுத்த இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று டெல்லி வந்திருந்தார். அப்போது, நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி இதுதொடர்பாக பேசியுள்ளார்.

மேலும், வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்த உள்ள பிரம்மாண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நடத்தக்கூடாது.

அதற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களிடம் மம்தா கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஒரு குழுவை உருவாக்தி அந்தக் குழு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த மம்தா எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் குழுவில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவிடமும் மம்தா பானர்ஜி இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிகைடையே 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்துவதில் நம்பகத்தன்மை இல்லை என்றும், வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.