முக்கிய செய்திகள்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் அதிகாரி மீது சொத்துக் குவிப்பு புகார்: விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு..


ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகாரை விசாரிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் விசாரிக்குமாறு கடந்த மார்ச் 12-ம் தேதி சிபிஐ, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஸ்வர் சிங்குக்கு எதிராக ரஜ்னீஷ் கபூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ராஜேஸ்வர் சிங் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இதுதவிர, ரஜ்னீஷ் கபூருக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஸ்வர் சிங் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி, “ராஜேஸ்வர் சிங் மீதான புகாரை விசாரிக்க அரசு தயாராக உள்ளது” என்றார்.

பின்னர் நீதிபதிகள் கூறும்போது, “எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவர் மீது புகார் எழுந்தால், அவரை விசாரணையிலிருந்து பாதுகாக்க விரும்பவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரி ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என கூறப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு விசாரணையிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பாதுகாப்பு வழங்க முடியாது.

மிகவும் உணர்வுபூர்வமான வழக்கை விசாரித்து வரும் ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானது. அது சரியோ, தவறோ அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இந்த புகார் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. எந்தவித நடவடிக்கைக்கும் அவர் உட்பட்டவர்தான். அதேநேரம் அவருக்கு எதிராக எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை” என்று கூறி, கபூர், சுவாமி, சிங் ஆகிய 3 பேரின் மனுவையும் முடித்து வைத்தனர்.