அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: இரண்டு குருக்கள் நீக்கம்..


மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் கட்டி அலங்காரம் செய்த விவகராம் ஆன்மீக வாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுடிதார் கட்டி அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோயில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் அபயாம்பிகை தனி சன்னதியில் இருந்துவருகிறது. அபயாம்பிகை அம்மனுக்கு நாள்தோறும் 6 கால பூஜை நடைபெறுவது வழக்கம், தினந்தோரும் குருக்கள் மாறிமாறி பூஜைசெய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வந்த ராஜ் மற்றும் கல்யாணம் ஆகிய குருக்கள் அபாயம்பிகைக்கு சுடிதார் அலங்காரம் செய்து பூஜை செய்ததை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்து கோவில்களில் உள்ள அம்மனுக்கு பட்டு அணிவித்து பூஜை செய்வதுதான் இந்துக்களின் வழக்கம்.

சுடிதார் அலங்காரத்தில் அம்மன் இருப்பதை கண்ட ஒருசிலர் தங்களது செல்போனில், படம் எடுத்து தங்களின் சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவவிட்டனர். அந்த படம் ஆன்மிக வாதிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பிவருகிறது. அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த ராஜ் குருக்கள் உள்ளிட்ட இருவரும் ஆகம விதிகளுக்கு மாறாக அலங்காரம் செய்துவிட்டானர் என திருவாடுதுறை ஆதினம் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோயிலின் தலவரலாறு குறித்து பட்டாச்சாரியார் ஒருவர் கூறுகையில்,’’பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். பார்வதி மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையை மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்துகொண்டு அவமானப்பட்டாள்.
இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார். அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது. நாடிவந்தமயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, அபயப்பிரதாம்பிகை, அஞ்சல்நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றனர். சிவபெருமான் பார்வதியை மயிலாக மாறும்படி சபித்து விடுகிறார். பார்வதி மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள்.

மனம் இளகிய சிவன் மயில் வடிவிலேயே தோன்றி கௌரிதாண்டவ தரிசனமும் அம்பிகைக்கு அருள்கிறார். சிவனது கௌரி தாண்டவத்தை, “மயூரதாண்டவம்” என்றும் கூறுகிறோம், சிவன் மயில் உருவில் வந்து அருள்புரிந்ததால், மாயூரநாதர் என்று அழைகப்படுகிறார். மாயூரநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுக்கிறது.’’என்று கூறி முடித்தார்.

ஏற்கனவே ஆண்டாள் விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தியில் தீப்பிடித்து ஆன்மீக வாதிகளை மனமுடைய வைத்திருக்கிறது. இந்தநிலையில் அபயாம்பிகைக்கு சுடிதார் கட்டிய விவகாரம் மேலும் கொழுந்துவிட்டு எரிய துவங்கியிருக்கிறது.