அமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்

அதிகாலை 5 மணிக்கெல்லாம் கோவை காந்திநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினார் சிவஞானம்.

மார்கழி குளிர் அவரை சற்று நடுங்க வைத்தது.இதமாக பக்கத்தில் உள்ள பேக்கரி கடையில் டீ அருந்தலாம் என்று சென்றார்.

அப்போது “ வணக்கம் சார் ” என்ற குரல் கேட்ட பக்கம் திரும்பினார் சிவஞானம். அவரிடம் படித்த மாணவன் குமரேசன் , ”என்னப்பா குமரேசா நல்லாயிருக்கியா,இது உன் கடையா என்று கேட்டார்.

“இது என் கடைதான் சார்” எப்ப வந்தீங்க சார், ,எனக் கேட்டான் குமரேசன்.

“மனைவி,குழந்தைகளும் நலமா” என வாஞ்சையோடு விசாரித்தார் திருஞானம் .

குமரேசன் சிறுவயதாக இருந்தபோதே அவனுடைய தகப்பனார் தவறிவிட்டார். கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலைக்கு முன்னேறியிருப்பதை நினைத்து மனதிற்குள் பெருமிதம் கொண்டார்.

டீயை குடித்தவுடன் பணம் கொடுக்க முயன்றதை தடுத்தான் குமரேசன். “காசெல்லாம் வேணாம் சார், நீங்க கடைக்கு வந்ததே சந்தோஷமாக இருக்கு, வீடு பக்கத்தில் தான் இருக்கு வாங்க” என்றான்.

”இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்” என்றார் சிவஞானம்.

“சங்க கூட்டத்துல கலந்துகிட்டு இன்னைக்கி ராத்திரியே ஊருக்கு திரும்பனும்” என்றார்.

“சரி சார் இராத்திரி பஸ் ஏற வரும்போது கடைக்கு வந்துட்டு போங்க சார் ” எனக் கூறி குமரேசன் ஆட்டோ பிடித்து சிவஞானத்தை அனுப்பி வைத்தான்.

இராமனாநாதபுரத்தில் உள்ள லெட்சுமணன் வீட்டிற்கு சென்றார். லெட்சுமணனிடம் வருவதை நேற்று மாலை சொல்லியிருந்தார்.

சிவஞானத்தை லெட்சுமணன் வீட்டு வாசலில் நின்று “அண்ணே வாங்க” என்று அழைத்து , வீட்டிற்குள் கூட்டிச் சென்றான். ”வாங்க மாமா” என்று கூறியபடியே வெளியில் வந்தாள் சுந்தரி.லெட்சுமணன் மனைவி சிவஞானத்தின் ஒன்று விட்ட அக்கா மகள்.

”நல்லாயிருக்கம்மா” என்ற சிவஞானம் ”நல்லாயிருக்கியா லெட்சுமணா,ஆப்ரேசனுக்குப் பிறகு உடம்பு எப்படியிருக்கு, ஆப்ரேசன் செஞ்ச நேரத்தில வரமுடியல உன்னை பார்த்திட்டு போகலாமுனுதான் வந்தேன்” என்றார்..

“அமெரிக்காவில இருக்கிற மகன் எப்படியிருக்கான், வந்தானா“ என்றார். ”அவனுக்கு வரத்தோது இல்லையாம்” என்றார் லெட்சுமணன். ”மருமகளும் அங்கதானே இருக்கு” என்றார் சிவஞானம்.

“ஆமா கல்யாணம் ஆகி போனவங்க இன்னும் வரலை, பொறந்த புள்ளையையும் காட்டல” என்று சோகக் குரலில் லெட்சுமணன் சொன்னார்.

அதற்குள் சுந்தரி காஃபியுடன் வர “காஃபி வேணாம்மா கடையில இப்பத்தான் டீ குடித்தேன்“ என்றார்.

“மாமா அத்தை எப்படியிருக்காங்க, செல்வா எங்க இருக்கான் அவன் மனைவி குழந்தைகள் எல்லாரும் நல்லாயிருக்காங்கலா” என்றாள் சுந்தரி.

“எல்லாரும் நல்லாயிருக்கோம்மா, காலையில 10 மணிக்கு கொடீசியா அரங்கத்துல ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க கூட்டம் இருக்கு அதற்குத்தான் வந்தேன்” என்றார்.

“சரி இருங்க மாமா இன்னைக்கு அமாவாசை வேற குளிச்சிட்டு சாப்பிட்டு போகலாம்” என்றாள் .“இல்லம்மா தங்க ரூம் எல்லாம் போட்டிருக்காங்க அங்கே போய்கிறேன்”.

“லெட்சுமணனை பார்த்து விட்டு போகலாம் என வந்தேன்” என்றார். “சரி மாமா டிபன் சாப்பிட்டாவது போங்க” எனக் கூறி சமையலறைக்கு சென்றாள் சுந்தரி.

வீட்டின் முன் பகுதியில் லெட்சுமணனின் தாய் தந்தை போட்டோவிற்கு மாலைபோடப் பட்டிருந்தது. அதை எதைச்சையாக கவனித்தேன் மனம் கலங்கியது.

சிவஞானம் லெட்சுமணன் முகத்தில் சோகத்தோடு ஒருவித கலக்கம் தெரிந்தது. “என்னப்பா லெட்சுமணா அப்ரேசன் செஞ்சு உடம்பு நல்லாத்தானே இருக்கு ஏன் ஒரு மாதிரியா இருக்கே” என்றார்.

“இல்லை அண்ணே மகன், மருமக புள்ளைகள பார்க்கனும் போல இருக்கு, அவன் அமெரிக்கா போயி 5 வருசமாச்சு வரலை அதுதான் கவலையா இருக்கு” என்றார் லெட்சுமணன்.

“சரி கவலைப்படதேப்பா பொங்கலுக்கு ஊருக்க வா, நம் ஜனங்களைப் பார்த்தா கவலையெல்லாம் பறந்து போகும்” என்றார் சிவஞானம்.

“அம்மா சுந்தரி நான் கௌம்புறேன் இன்னொருநாள் வரும்போது சாப்பிடுகிறேன்” என்று சொன்னார். வாசல் வரை வந்த லெட்சுமணன் என் கையை பிடித்து “என்னை பார்க்க வந்ததற்கு நன்றி அண்ணே” என்று கூறி கண் கலங்கினான்.

“கவலைப்படாதே எல்லாம் நல்லபடியா நடக்கும்” என ஆறுதல் கூறினார். ஆட்டோ பிடித்து கொடீசியா செல்ல ஆட்டோ ஏறினார்.

ஆட்டோவில் ஏறியதும் சிவஞானத்தின் நினைவு லெட்சுமணனின் தாய்,தகப்பனை் பற்றி வந்தது.

லெட்சுமணன் ஒரே பிள்ளை செல்லமாக வளர்க்கப்பட்டவன். தாய்,தந்தை மீது அதிக பாசம் கொண்டவனாக திருமணத்திற்கு முன் இருந்தவன்.

இவனைப் போல் பிள்ளையை பார்க்க முடியாது என பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். கோவையில் வேலை பார்த்தாலும் மாதம் ஒரு முறை தாய்,தகப்பனை பார்க்க வந்து விடுவான்.

அவர்கள் இருவரும் அமைதியானவர்கள். அன்புள்ளம் கொண்டவர்கள். என்னிடம் மிகுந்த பாசம் கொண்டவர்கள்.

நான் சிறுவயதாக இருக்கும் போது அவர்கள் வீட்டில் உண்ணாத நாளே இல்லையெனலாம்.

ஞானத்தை கூப்பிடு என எல்லா விசயத்திற்கும் வயதில் இளையவனான என்னை கலந்து ஆலோசிப்பார்.

அப்படித்தான் லெட்சுமணனுக்கு எனது ஒன்று விட்ட அக்கா மகளை மணம் முடித்து வைக்க விரும்புவதாக என்னிடம் சொல்லும் போது நான் யோசித்தேன்.

அதை கவனித்த லெட்சுமணனின் தந்தை ”ஞானம் என்ன யோசிக்கிற” என்றார். நான் ஏதும் கூறாமல் வந்து விட்டேன் சுந்தரியின் அம்மா என்னிடம் பலமுறை பேசி ஒருவழியாக சுந்தரியை திருமணம் முடிந்து வைத்தோம்.

ஆரம்ப காலங்களில் சுந்தரி தனது மாமனார்,மாமியாரை நன்கு கவனித்தாள், ஆனால் கல்யாணமான சில மாதங்களில் கணவனுடன் கோவைக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவள் ஊருக்கு வருவதைக் குறைத்தாள், அப்படியே வந்தாலும் ஏதோ ஒப்புக்கு வந்து பார்ப்பாள்.

குழந்தை பிறந்தபோது பார்க்கச் சென்ற மாமனார்,மாமியாருக்கு அப்போதுதான் தெரிந்தது மருமகளின் மறுபக்கம், முகத்தை கடுமையாக்கி சாடைமாடையாக அவர்களைத் திட்ட ஆரம்பித்தாள்.

மருமகளில் செயலால் மனமுடைந்து போன இருவரும் ஊருக்கு திரும்பி விட்டனர். மாதம் ஒருமுறை வந்த மகனோ நாளடைவில் வருடக்கணக்கில் வரவில்லை செலவுக்கு பணமும் கூட அனுப்புவதில்லை.

நிலங்களை பங்குக்கு விட்டதால் வந்த வருமானத் வைத்து குடும்பம் நடத்தினர். அவனது தந்தைக்கு கண்பார்வை மங்கியபோது நான் வெளியூரிலிருந்து பக்கத்து ஊர் பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன்.

அப்போது தான் தெரிந்தது அவர்களின் நிலை தாயாரால் சமைக்க இயலவில்லை, அவனின் தந்தை மண்ணெண்ணெய் ஊற்ற முடியாமல் அவர் தவிப்பதை பார்த்தவுடன் பதறிவிட்டேன். “சித்தப்பு ”என்றேன். என் குரலை கேட்டவுன் “ஞானமா” எனக் கேட்டார்.

உடனே மனைவியை அழைத்து “வாத்தியார் ஞானம் வந்திருக்கான்” என்றார். “சிவஞானம்” என ஒரு மூலையிலிருந்து அழைப்பு வந்தது. அந் த இடத்திற்கு செல்லும் முன் ஓரே மூத்திரவாடை உள்ளே சென்று பார்த்தால் , அவர்கள் ஒட்டு துணியை கட்டியிருந்தார்கள் எப்படி இருந்த இவர்களுக்கா, இந்த நிலமை என கண்கள் கலங்கி விட்டன.

மெல்ல கையைப்பிடித்து எழுந்து உட்கார வைத்தேன் “நல்லாயிருக்கியா சிவஞானம் புள்ளைகள் எல்லாம் எப்படியிருக்கு” என அந்த நிலைமையில் என் மீது அன்பு வைத்து கேட்டவுடன் நான் கதறி அழுதுவிட்டேன். எத்தனை முறை எனக்கு சோறு போட்ட கை, இன்று கவனிப்பாரற்று இருப்பதை பார்த்து கையை பிடித்து அழுதேன்.

அப்போதுதான் லெட்சுமணன் வருவதில்லை, பேசுவதில்லை எனத் தெரிந்து கொண்டேன் .

அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் டைலர் ஒருவர் அங்கு வந்தார். அவர் என்னிடம் இவர் மகனெல்லாம் ஒரு மனுசனா சார் என்றார்.

கடந்த மாதம் அடைமழையின் போது இந்த அம்மா பாத்ரூம் போக வெளியே வந்திருக்கு தடுமாறி படியில விழுந்து வீதியிலே கொட்டும் மழையில் உடம்பில துணியில்லாமா இராத்திரி முழுவதும் கிடந்திருக்கு,, மறுநாள் அதிகாலையில யாரே பார்த்து துாக்கியாந்திருக்காங்க.

மகனுக்கு தகவல் தெரிவித்தும் வந்து பார்க்கல, பக்கத்து வீ்டுகாரம்மாதான் கடையில சாப்பாடு வாங்கி கொடுக்குது. அதைக்கூட அவங்களாலே சாப்பிட முடியல என்றார்.

லெட்சுமணன் மீது ஆத்திரமாக வந்தது. பெற்ற தாய்,தகப்பனை இப்படி தவிக்கவிட்டுவிட்டானே,

நானும் அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டேன். மருத்துவரையும் அழைத்து காண்பித்தேன். அவர்கள் பெற்ற மகனையோ, மருமகளையோ ஏதும் குறைகூறவில்லை. அவன் பாவம் என்றார்கள்.

லெட்சுமணனுக்கு மிகக் கடுமையாக கடிதம் எழுதினேன். அதில் உனக்கும் இந்த நிலை ஒருநாள் வரும் என்று எழுதியிருந்தேன்.

ஒருநாள் சனிக்கிழமை விடுமுறை தினத்தன்று அவர்களைப் பார்க்கச் சென்றேன். அப்போது ஞானம் என்ற குரல் கேட்டவுடன் பக்கத்தில் சென்றேன் என்னை பார்த்தபடியே சின்னம்மா (லெட்சுமணனின் தாயார்) உயிர்போய்விட்டது.என்ன செய்வதென்று அறியாமல் விக்கித்து நின்றேன்.

அன்று இரவே சித்தப்பாவும் இறந்து விட்டார்.இருவரும் அப்படித்தான் இருந்தார்கள். லெட்சுமணன் வந்தான் மகனை அழைத்து வரவில்லை, மனைவியுடன் வந்திருந்து காரியங்களை முடித்தான்.

அவனிடம் நான் பேசவவில்லை பலமுறை பேசவந்தான் நான் ஒதுங்கிவிட்டேன், நீ தாய்,தந்தைக்கு செய்த துரோகத்தை என்னால் மறக்க முடியவில்லை என்றும் கூறிவிட்டேன்.

மகன் திருமணத்திற்கு அழைத்தான் சென்று வந்தேன். அத்தோடு அவனின் தொடர்பு இல்லாமல் இருந்துவிட்டேன்.

ஆட்டோகாரர் “அய்யா நல்ல துாக்கமா” என்றார். “இல்லை ஏதோ நினைவு” என்றேன்.

இவன் மகனும் இவனைப்போலவே கவனிக்கவில்லை,

பெற்ற தாய்,தகப்பனை கவனிக்காத இவர்கள் மேலோகம் சென்ற அவர்களுக்கு அமாவாசை அன்று விருந்து படைக்கிறார்களாம், என்ன மனுசனுங்க.. உயிரோடு இருக்கும் போது சோறு போடாவிட்டாலும் ஒருவார்த்தை ஆறுதலாக பேசியிருந்தால் அவர்கள் மனம் எவளவு சந்தோஷப்பட்டிருக்கும்.

ஏங்கி தவித்த தாய் தகப்பனை பார்க்க வராமல் அன்று காரணம் சொன்னவன் இன்று புலம்பி தவிக்கிறான்.