முக்கிய செய்திகள்

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி முழு அடைப்பு..


ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதனை வலியுறுத்தி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அண்மையில் தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது. இதனை தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஆந்திரபிரதேச பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு அறிவித்தது.

இந்த போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஆந்திராவில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பெரும்பலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பையொட்டி ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களில் உள்ள 14,000 பேருந்துகள் அந்தந்த பேருந்து நிலையம் மற்றும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. பல இடங்களில் எதிர்க்கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று அலர் கூறியுள்ளார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சந்திரபாபு இரட்டைவேடம் போடுவதாகவும், எதிர்க்கட்சியாக இருந்த போது அவர் முழு அடைப்பு போராட்டம் நடத்தியதாகவும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் கூறியுள்ளார்.