அமெரிக்காவின் போயிங் விமானம் ஓடுதளத்தில் சறுக்கி ஆற்றுக்குள் இறங்கியது : 21 பயணிகள் காயம்..

அமெரிக்காவின் போயிங் விமானம் ஆற்றுக்குள் இறங்கிய விபத்தில் ஊழியர்கள், பயணிகள் என 140 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கியூபாவின் குவாண்டனமோ விரிகுடாவில் இருந்து 136 பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 140 பேரை சுமந்து கொண்டு மியாமி நிறுவனத்தின், போயிங் 737 விமானமானது அமெரிக்காவின் புளோரிடா சென்றது. அந்நாட்டு நேரப்படி,

நேற்று இரவு ஜாக்சன்வில்லே விமான நிலையத்தில் தரை இறங்க முற்படுகையில் அங்கு கனமழை பெய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மிகவும் சிரமப்பட்டு ஓடுதளத்தில் விமானத்தை இயக்கிய போது, சறுக்கிச் சென்றுள்ளது.

சென்ற வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளம் அருகே உள்ள செயிண்ட் ஜான்ஸ் ஆற்றுக்குள் இறங்கியது.

ஆனால் விமானம் மூழ்கும் அளவிற்கு ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அதில் இருந்த ஊழியர்கள், பயணிகள் என 140 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

கடற்படைத் தளம் அதன் அருகிலேயே உள்ளதால் உடனடியாக கடற்படை வீரர்களும், மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர்.
21 பயணிகள் காயமுற்றனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
பயணிகளையும், ஊழியர்களையும் பத்திரமாக ஆற்றில் இறங்கி விமானத்தில் இருந்து மீட்டனர். இதை ஜாக்சன்வில்லே நகர மேயர் உறுதி செய்துள்ளார்.

ஆற்றில் விமான எரிபொருள் கலந்து விடாமல் தடுப்பதற்கான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.