முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம்: 4-ஆவது நாளாக திமுக போராட்டம்: சென்னையில் 17 இடங்களில் மறியல்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் தொடர்ந்து 4-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் 17 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி விவகாரத்தில் திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த திட்டத்தையும் உருவாக்கவில்லை. கெடு முடிந்தும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகம் கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

கைது செய்யப்பட்டு விடுதலை இந்த கூட்டத்துக்கு பின்னர் அனைத்து கட்சி தலைவர்கள் திடீரென வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து ஸ்டாலின், திருமா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கைது செய்தாலும் போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி நேற்றைய தினம் சென்னையில் 30 இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 3-ஆவது நாளாக நேற்று சென்னையில் 10 இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மடிப்பாக்கத்தில் மறியல் நடத்திய மா.சுப்பிரமணியன், ஓட்டேரியில் மறியல் நடத்திய சேகர்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திமுகவினர் நேற்றும் இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினர் 4-ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 17 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

5000 பேர் போராட்டம் ஆலந்தூரில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் 5000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பாடி மேம்பாலம் அருகே அனைத்துக் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தை திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அயனாவரத்தில் மோடி உருவபொம்மை எரிக்க முயற்சிக்கப்பட்டது. பேசின் பிரிட்ஜ் போராட்டத்தில் இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். சென்ட்ரல் வரும் புறநகர் ரயிலை மறித்து இந்திய கம்யூ போராட்டம் நடத்தினர்.

சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தந்தை கைது செய்யப்பட்டார். தமிழக அரசை திரைமறைவில் இருந்து குருமூர்த்தி இயக்கி அசாதாரண சூழலை உருவாக்குவதாக நந்தினி புகார் தெரிவித்துள்ளார்.