மத்திய அரசின் திட்டங்களுக்குத் துணைபோகும் பட்ஜெட்: வைகோ


தமிழக மக்களுக்கு அழிவை உண்டாக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு துணைபோயிருப்பது 2018-19-ம் ஆண்டின் பட்ஜெட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் புதிதாக எந்தத் திட்டங்களும் இல்லை. நிதி நலை அறிக்கை குறித்த குறிப்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைக் குறிப்பிடாதது கண்டனத்துக்கு உரியதாகும்.

14-வது நிதிக்குழு தமிழகத்திற்கு பரிந்துரை செய்த அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ரூ.81,570 கோடி. ஆனால், மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது ரூ.72,534 கோடி மட்டுமே. நிதி ஒதுக்கீடு அளவையும் 14-வது நிதிக்குழு 4.969 விழுக்காட்டிலிருந்து 4.023 விழுக்காடாகக் குறைத்துவிட்டது.

மத்திய அரசின் அநீதி, மாநில உரிமைகள் பறிப்பு இவற்றை வரவு செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் போதிய அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

2018-2019-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்தக் கடன் 3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டைவிட 41,479 கோடி ரூபாய் அதிகரித்து இருக்கிறது. மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவைக் கடன் அளவு 25 விழுக்காட்டுக்குக் கீழே இருப்பதாக கூறப்பட்டாலும், நிதிப் பற்றாக்குறை 23,176 கோடி ரூபாய் ஆகவும் வருவாய் பற்றாக்குறை 17490.58 கோடி ரூபாய் ஆகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருக்கும் என்பது எப்படி சாத்தியமாகும்? உதய் மின் திட்டத்தில் இணைந்தால் ரூ.1335 கோடி சேமிப்பு ஏற்படும் என்று கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துவிட்டு, இப்போது உதய் திட்டத்தால் மின் வாரியம் நட்டத்தைச் சந்தித்து வருவதாகத் தெரிவிப்பது முரணாக உள்ளது.

வேளாண் துறையில் நீடித்த வளர்ச்சி என்பது அதிமுக அரசின் வெற்று அறிவிப்பு. நடைமுறையில் வேளாண்துறை கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கி முற்றாக அழிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஜனவரி 19 ஆம் தேதி மத்திய அரசு ‘குளோபல் டென்டர்’ விட்டுள்ளது. மத்திய அரசின் நாசகாரத் திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு துணைபோயிருப்பது இந்த நிதிநிலை அறிக்கையில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுகுறித்து கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

வேளாண் உற்பத்தியை 110 இலட்சம் மெட்ரிக் டன் என்று இலக்கு நிர்ணயித்துள்ள தமிழக அரசு, நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,000 ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 ஆகவும் கொள்முதல் விலை தீர்மானிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வருவது ஏன்? கரும்பு விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 2,000 கோடியை பெற்றுத் தராமல், கரும்பு உற்பத்திக்கு ஊக்கத் தொகை ரூ. 200 என்று அறிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு ஆகும்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்திட ரூ. 1,781 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத் தக்கது என்றாலும், இத்திட்டத்தை விரைந்து தொடங்கினால்தான் நம்பிக்கை ஏற்படும்.

தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான தீர்வு எதுவும் இல்லை.

உள்ளாட்சித் தேர்தல் பற்றிய திட்டவட்டமான அறிவிப்பு இல்லாதது கண்டனத்துக்கு உரியது.

செம்மொழி தமிழ் உயர் ஆய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்க்காததும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்க கோரிக்கை விடுக்காததும் இந்த அரசின் நிலைப்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

தரங்கம்பாடி அருகே ரூ. 200 கோடியில் மீன்பிடி துறைமுகம், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் உணவு பதப்படுத்தும் பூங்காக்கள், குமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் மீன்பிடித் துறைமுகம், மீன் பதப்படுத்தும் பூங்கா போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், கடந்த நிதிநிலை அறிக்கையில், மதுரையில் ரூ. 40 கோடியில் பால் பதப்படுத்தும் நிலையம், எண்ணுhர், காசிமேடு உட்பட 7 மீன்பிடித் துறைமுகங்கள் ரூ. 1,105 கோடியில் மேம்படுத்துதல், இராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் ரூ. 113 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன்.

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மதுக்கடைகளை மூடியதால் மதுபான விற்பனையில் வருவாய் இழப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளது தெரிகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் அலட்சியப்போக்கை நிதிநிலை அறிக்கை காட்டுகிறது.

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைகள், கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் அன்றாட நிகழ்வுகளாகி மக்கள் கவலைப்படும் நிலையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறுவது கேலிக் கூத்து ஆகும்.

எடப்பாடி பழனிசாமி அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாக தந்திருக்கிறது”, என அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.