முக்கிய செய்திகள்

குழந்தைகளை வன்கொடுமை செய்பவருக்கு மரண தண்டனை: குடியரசுத்தலைவர் ஒப்புதல்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் ‘போஸ்கோ’ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பொருளாதார குற்றவாளிகள் தொடர்பான அவசர சட்டத்திற்கும் ஒப்புதல் அளித்தது. இவ்விரு அவரச சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

காஷ்மீரில் கத்துவா, உத்தரப் பிரதேசம் உன்னாவ் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, மைனரை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என்ற போஸ்கோ சட்டத்தை மாற்றி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருந்தநிலையில், தற்போது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.