காமென்வெல்த் போட்டி : பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு முதன்முறையாக தங்கம்


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடந்துவரும் காமென்வெல்த் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் கலப்பு அணி பிரிவில் இந்திய அணி முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.

கோல்ட்கோஸ்ட் நகரில் காமென்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த பாட்மிண்டன் பிரிவில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், மலேசிய அணியும் மோதின.

இந்திய அணி சார்பில் சத்விக் ரங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பாவும், மலேசியா அணி சார்பில் பெங் சூன் சான் மற்றும் லியு யாங் கோ ஆகியோரும் விளையாடினார்கள்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் மலேசியாவின் பெங் சூன் சான் மற்றும் லியு யாங் கோ ஜோடியை 21-14, 15-21, 21-15 என்ற செட்களில் இந்தியாவின் சத்விக் ரங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணைஎளிதாக தோற்கடித்தனர் .

முன்னதாக ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் 3 முறை ஒலிம்பிக்கில் வெள்ளிவென்ற மலேசிய வீரர் லீ சாங் வீ யை 21-17,21-14 என்ற கணக்கில் சாய்த்தார் இந்திய வீரர் கிடம்பி சிறீகாந்த்.

அதேசமயம், ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் மலேசிய வீரர்கள் கோ, வீ கியாங் ஜோடியிடம் 15-21, 20-22 என்ற கணக்கில் வீழ்ந்தனர் இந்திய வீரர்கள் ரன்கிரெட்டி சிராக் ஷெட்டி.

மகளிர் ஒற்றையர் பிரிவில் மலேசிய வீராங்கனை சோனியா சியாவை 21-11, 19-21, 21-9 என்ற செட்களில் வீழ்த்தினார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால்.

ஏற்கெனவே இரு போட்டிகளில் வென்று தங்கப்பதக்கத்தை உறுதி செய்துவிட்டதால், மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெறவில்லை.

காமென்வெல்த் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் தொடர்ந்து 3 முறை தங்கப்பதக்கம் வென்று மலேசிய அணி கோலோச்சி இருந்தது. அதை முறியடித்து, இந்திய அணி முதன்முறையாக தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.