தத்துவப் போருக்கு தேர்தல் தடையல்ல! – தலையங்கம்

 

குஜராத்தில், 100 இடங்களைக் கூட கைப்பற்ற முடியாமல் போன பின்னடைவையும் தாண்டி, பாஜகவினர் தங்களது வெற்றியைப் பெரிதாகவே கொண்டாடித் தீர்க்கின்றனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அவர் பிரதமரான பின்னர் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. அப்படி என்றால் எந்த அளவுக்கு தங்களது பரிவார பலம் அனைத்தையும் அவர்கள் பிரயோகித்திருப்பார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல, பிரதமர் மோடிக்கு அவரது கட்சியும், ஆட்சி அதிகார உபகரணங்களும் மட்டுமின்றி, ஊடகங்களும், ஏடுகளும் கூட எந்த வெட்கமுமின்றி சேர்ந்தே பிரச்சாரம் செய்தன என்பதுதான் உண்மை. 14 நாட்களில் மோடி பங்கேற்ற 34 பொதுக்கூட்டங்களையும், வடக்கில் உள்ள ஒரு சில ஊடகங்களைத் தவிர அனைவரும் இடையறாத நேரலையாகவே ஒளிபரப்பினர். இப்போதும் பாஜக பெற்றதை அமோக வெற்றி என கூறி, அத்தகைய ஊடகத்தினரும் சேர்ந்து குதியாட்டம் போடுகின்றனர். குஜராத்தில் ஆட்சியமைப்பதற்கான இடங்களை பாஜக பெற்றிருப்பது உண்மைதான். ஆனால், இத்தனை பெரிய பலத்தைப் பிரயோகித்தும், காங்கிரசின் அடிப்படைப் பலத்தை அக்கட்சியினால் அசைத்துப் பார்க்க முடியவில்லை என்ற உண்மை முழுமையாக பேசப்படவில்லை.

இது ஒருபுறமிருக்க, காங்கிரசும், அதன் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராகுலும் இந்தத் தேர்தல் முடிவில் கற்க வேண்டிய பாடம் நிறையவே இருக்கிறது. குறிப்பாக, ஜாதி ரீதியான அமைப்புகளுடன் வெளிப்படையாக கைகோர்க்கும் வியூகத்தை மக்கள் ஏற்கவில்லை என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படைப் பிரச்சனைகளுக்கான தீர்வு, மதச்சார்பின்மை, சாதி, மத பூசல் தகர்ப்பு, மதநல்லிணக்கம், இவற்றின் அடையாளமாக பார்க்கப்படும் காங்கிரஸ், அதற்கு உண்மையாகவும், நேர்மையாகவும் தன்னை முழுமையாக தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இருபதாண்டுகளுக்கும் மேலான ஆட்சி மீதான கசப்பு, பணமதிப்பிழப்பு,  ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்பு இவற்றையும் தாண்டி வர்த்தக சமூகத்தினர் அதிகமுள்ள சூரத் பகுதியில் பாஜக முழுமையாக வெற்றிபெற்றுள்ளது. காங்கிரசுக்கு ஓர் இடம் கூட அப்பகுதியில் கிடைக்கவில்லை. இதுதான் அந்த மக்களின் மனோநிலை. ஆனாலும், தனக்கென்றிருக்கும் த்ததுவார்த்த தார்மீக பலத்துடன் காங்கிரஸ் இதுபோன்ற மக்கள் கூட்டத்தை வசப்படுத்தத் தயங்கக் கூடாது.

மத்திய, மாநில ஆட்சி இயந்திரங்கள் பேரிரைச்சலுடன் மேற்கொண்ட பிரச்சாரம், இந்துத்துவ பரிவாரங்களின் கச்சிதமாக திட்டமிடப்பட்ட அமைப்புரீதியான வாக்குவேட்டை வியூகம், ஊடகங்களின் எதிர்மறைப் பிரச்சாரம்… என,  இத்தனை தடைகளையும் தாண்டி, குஜராத்தில் கடந்த பேரவைத் தேர்தலை விட காங்கிரஸ் தற்போது  அதிக இடங்களைப் பிடித்திருப்பதுடன், 100 என்ற மூவிலக்க இடங்களைக் கூட பாஜகவுக்கு விட்டுத் தராமல் போராடிய ராகுலுக்கு, இந்தத் தேர்தல் முடிவு மிகப்பெரிய வெற்றி என்பதே உண்மை.

எனினும், காங்கிரஸ் தனது பின்னடைவுகளுக்கான அழுத்தமான காரணிகளைக் கண்டுபிடித்து களைவதிலும், தவறுகளைத் திருத்திக் கொள்வதிலும் இனியும் சுணக்கம் கூடாது.

பிராந்திய அளவில் தலைவர்களை உருவாக விடாமல் பார்த்துக் கொள்ளும் பண்டிதத் தனத்தை ராகுல் காலத்திலாவது காங்கிரஸ் கைவிட வேண்டும். அந்தக் கட்சிக்கு நேர்ந்த இத்தனை பெரிய பின்னடைவுக்கு அதுவே முழுமுதல் காரணம். பாஜகவின் பலவீனமாக நிலவும் பிராந்தியத் தலைவர்கள் பஞ்சத்தை, தனது பலமாக மாற்றிக் கொள்ள காங்கிரஸ் கற்க வேண்டும். 60கள் வரை காங்கிரசில் காணப்பட்ட பிராந்தியத் தலைவர்கள் செல்வாக்கு போக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் நீண்டதூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், அது தவிர்க்க முடியாத, கட்டாயம் மேற்கொண்டாக வேண்டிய பயணம். தலைவர்களைக் கண்டுபிடிக்கும் வேலையை இனியும் காலம் தாழ்த்தாமல் காங்கிரஸ் தொடங்க வேண்டும்.

இந்தியச் சமூகத்தின் அகமும், புறமுமான கட்டமைப்புகள் அலாதியானவை. அதனை நேருவுக்குப் பின்னர் காங்கிரசின் தலைவர்கள் (இந்திரா காந்தி உட்பட) நேர்த்தியாக கையாளத் தவறியதே அக்கட்சியின் பெரும் சரிவுக்குக் காரணம். பாஜகவும், அதன் பரிவாரங்களும் அமைப்பு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கச்சிதமான வேலைத்திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகின்றன. அதனை எதிர்  கொள்வதற்கு பொத்தாம் பொதுவான எதிர்ப்புகளும், பிரச்சாரங்களும் மட்டும் போதாது. தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டமிட்ட முன்னகர்வுகள் தேவை. ப.சிதம்பரம் போன்ற தலைவர்கள் தங்களது வாழ்நாளில் செய்ய வேண்டிய பணியாக கருதி ராகுலுடன் கைகோர்த்து இதனைச் செய்ய வேண்டும். தனித்தனியான விமர்சனங்களால், ஆக்டோபஸாக எழுந்து நிற்கும் இந்துத்துவ அதிகாரத்தை நெருங்கக் கூட முடியாது. தத்துவப் போருக்கு தேர்தல் முடிவுகள் எப்போதுமே தடையாகிவிடக் கூடாது என்பதைக் கவனத்தில் வைத்து காங்கிரஸ் தலைவர்களும் , ராகுலும் களமாட  வேண்டிய தருணம் இது. செய்வார்களா?  

Congress should march forward with their deep routen ideology