முக்கிய செய்திகள்

“சொன்னா நம்புங்கப்பா… யாரும் முடக்கல… அதுவா படுத்துருச்சு!”

பாதுகாப்புத்துறை இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என்று இணையக் குற்றங்களைக் கண்காணித்து வரும் தேசிய  தகவல் தொழில்நுட்ப மையம் (National Informatics Centre) தெரிவித்துள்ளது.

 மத்திய அரசின் பாதுகாப்புத் துறை, சட்டத்துறை, உள்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட இணையதளங்கள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

அதாவது, இணையதளங்கள் முழுவதுமாக வெளிப்படவில்லை என்றும், அர்த்தம் புரியாத சீன எழுத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. எனவே சீன ஹேக்கர்களால் முடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் பரவின.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு சரிசெய்யப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து முடங்கிய இணையதள தகவல்களை பாதுகாத்து, தேசிய தகவல் மையம் மறுசீரமைத்து வருவதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாதுகாப்புத் துறை இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என்றும், தொழில்நுட்ப பிரச்சனை மட்டுமே என்று தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, பாதுகாப்புத் துறையின் இணையதளம் தற்காலிகமாக முடக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Defence website not hacked : NIC