தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக-வில் இணையலாம்: முதல்வர் மீண்டும் அழைப்பு..

அ.ம.மு.க-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுகவில் இணையலாம் என முதல்வர் பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி, ஓரிரு நாட்களில் திமுகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து வரும் திட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் திமுக தலைமை வழங்கியதாகவும், அவர் அதை வெற்றிகரமாக செய்திருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “

அ.ம.மு.க.வில் இருந்து ஒருசிலர் விலகி வேறு கட்சிக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது அவர்களது விருப்பம். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கோம்.

டிடிவி தினகரன் தவிர்த்த மற்ற அனைவருக்கும் இது பொருந்தும்” என தெரிவித்துள்ளார்.