முக்கிய செய்திகள்

தீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக! : தலையங்கன்(ம்)

 

நெருக்கடியான காலக்கட்டங்களில் திமுக எப்போதுமே தடுமாறியதில்லை. அதன் அரசியல் தடுமாற்றங்கள் அனைத்துமே அதிகாரத்தில் இருக்கும் போதும், வெற்றி சூழும் தருணங்களின் போதும் அரங்கேறியவைதான். நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது அதனை துச்சமென எதிர்கொள்ளும் துணிவு கலைஞர் தலைமையிலான திமுகவுக்கு இருந்தது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வகையில், திமுக தடுமாற்றங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. 2ஜி அலைக்கற்றை வழக்கும் அவற்றில் ஒன்றுதான்.

ஆனால், சர்க்காரியா முதல், ராஜீவ் கொலை வரையிலான விவகாரங்களில் ஏற்பட்டதை விட, 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக பட்ட அவமானமும், இழக்க நேர்ந்த அரசியல் மாண்பும்  மிக,மிக அதிகம். 7 ஆண்டுகளாக காத்திருந்தும் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும், யாரும் தரவில்லை என்று நொந்து போய்க் கூறி இருக்கிறார், சிபிஐ சிறப்பு நீதிமன்ற  நீதிபதி ஓ.பி.சைனி.  ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆவண ரீதியாக எந்த ஆதாரத்தையும் அரசு தரப்பால் தர முடியவில்லை என்பதையும் அவர் தெளிவு படுத்தி இருக்கிறார். ஆனால், இந்த வழக்கை பெரிதாக பேசித்தான் 2011, 2016ல் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். 2014ல் மோடியும் இந்த வழக்கைப் பேசியே மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். 2ஜி வழக்கு தீர்ப்பின் மூலமாக, காங்கிரசுக்கு எதிரான முக்கியமான அரசியல் ஆயுதத்தை மோடி இழந்து விட்டதாக கூறுகிறது, தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு. அந்த அளவுக்கு திமுக என்ற அரசியல் சுவடையே அழித்துவிடும் வலிமையுடன் பின்னப்பட்ட வழக்கு வடிவ சதியில் இருந்து விடுதலையாகி இருக்கிறது திமுக. உண்மையிலேயே, திமுக என்ற பழம் பெரும் இயக்கம்,  இந்த நூற்றாண்டில் பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றி இது.

ஆனால், அரசியல் சதுரங்கம் என்பது, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கையில் கிடைத்த வெற்றியை பறித்து வேறு திசையில் வீசி எறிந்துவிடக் கூடிய விபரீத விளையாட்டு. எனவே, இந்த வெற்றிக்குப் பிறகான காலம், திமுக மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய காலம் என்பதுதான் தற்போதைய கவலை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, திமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கசப்பு மேலோங்கி வந்த காலத்தில் தொடரப்பட்ட வழக்கு இது. ஆ.ராசா ஓராண்டுக்கு மேலும், கனிமொழி 6 மாதங்களும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆ.ராசா இந்தக் காலக்கட்டத்தில் காட்டிய உறுதி அவரது அரசியல் திடத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு..

நாட்டில் தணிக்கை அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் தொடரப்பட்ட மிகப்பெரிய வழக்கு இதுதான். தணிக்கை அறிக்கை என்பது, ஊராட்சிகளுக்கும் கூட உண்டு. அவ்வளவு ஏன், மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, 17 ஆயிரம் கோடி அரசு நிதியை விரயம் செய்ததாக தணிக்கை அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டது. அதைவைத்து யாரும் அவர் மீது ஊழல் வழக்கு தொடரவில்லை.  ஆனால், திமுகவை முடக்க முதலில் காங்கிரசும், அடுத்து பாஜகவும் 2ஜி வழக்கை, ஓர் கூர்மையான ஆயுதமாக குறைந்த பட்ச அரசியல் நேர்மை கூட இன்றி பயன்படுத்தின. இப்போது அதில் திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனால், இப்போது உள்ள அரசியல் சூழல் வேறு. தமிழகத்தில் திமுகவின் பிரதான அரசியல் எதிரியான ஜெயலிலதா இல்லை. கலைஞரோ முதுமை காரணமாக உடல்நலிவுற்றிருக்கிறார். பாரம்பரியமான மக்கள் செல்வாக்கை உடைய ஒரே தலைவராக மு.க.ஸ்டாலின் மட்டுமே தமிழக அரசியல் களத்தில் எஞ்சி நிற்கிறார். என்னதான் பரபரப்பாக பேசப்பட்டாலும் மற்றவர்கள் அனைவருமே நீர்க்குமிழிகளைப் போலத்தான். அதிமுக மற்றும் அதன் பிரிவுகளின் தலைவர்களோ நீர்க்குமிழிகளையும் விட சொற்பமான புகழாயுளைக் கொண்டவர்களே! அந்த வகையில், காங்கிரசும், பாஜகவும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஸ்டாலினை நோக்கி நகர்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இவர்களில், காங்கிரஸ் கட்சியினர் தனக்கான அரசியல் ஆதாயத்தை மட்டும் பார்த்துவிட்டு ஒதுங்கிச் செல்லும் பண்பைக் கொண்டவர்கள். அவர்களும் கூட அவ்வப்போது தமிழகத்தில் திராவிடச் சுவட்டை ஒழிப்போம் என முழங்கத் தவறுவதில்லை என்பது வேறு செய்தி. எனினும், அத்தகைய தத்துவார்த்த அரசியல் தந்திரத்தில், காங்கிரசையும் விட பாஜக அழுத்தமான வேலைத்திட்டங்களுடன் செயல்படக் கூடிய கட்சி. எனவே, இருவருமே நெருங்கி வரும்போது, யாரோடு கூட்டணி வைப்பது என்ற குழப்பம் திமுகவுக்கு நிச்சயம் ஏற்படும்.

அதுமட்டுமின்றி, கலைஞரை வந்து பிரதமர் மோடி சந்தித்துச் சென்ற போதே, 2ஜி வழக்கில் திமுகவுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்பது தெரிந்ததுதான் எனப் பரவலாகப் பேசப்படுவதையும் பார்க்க முடிகிறது. இது உண்மையா, பொய்யா என்ற ஆய்வுக்குள் நாம் போக விரும்பவில்லை. ஆனால், அப்படி ஒருவேளை திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க இசையுமே ஆனால், தமிழகத்தில் உயிர்த்துடிப்புடன் இருந்து வரும் திராவிட இயக்க அரசியலை மெல்லக் கொல்வதற்கு அதுவே வழி வகுத்ததாகிவிடும். இந்திய அளவில், மதவாதத்தையும், சாதிய வாதத்தையும், சனாதனத்தையும் ஒருங்கு சேர வெளிப்படையாக கோட்பாட்டு அடிப்படையிலேயே எதிர்த்து நிற்கும் ஒரே வெகுமக்கள் இயக்கம் திமுக மட்டும்தான். பாஜகவுக்கும், மற்ற கட்சிகளுக்கும் உள்ள முரண்பாடுகளும், மோதல்களும் மேலோட்டமான அரசியல் காரணங்களை உடையவை. ஆனால், திமுகவுக்கும், பாஜகவுக்கும் உள்ள முரண்பாடு அழுத்தமான தத்துவார்த்த அடிப்படையிலானது. எனவே, கூடா நட்பு திமுகவுக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கே கேடாய் முடியும் என்பதை, அண்ணாவால் தொடங்கப்பட்டு, கலைஞரால் பேணி வளர்க்கப்பட்ட அந்த இயக்கம் கவனத்தில் கொள்ளத் தவறிவிடக் கூடாது. ஆம்… 2ஜி வழக்கில் கிடைத்த தீர்ப்பு, திமுக பயணிக்க வேண்டிய திசையைத் திருப்பிவிடக் கூடாது என்பதுதான். தமிழகத்தில் மதவாதம் காலூன்றி விடக் கூடாது எனக் கருதும் கருத்தாளர்களின் கவலை.  

DMK : Aftermath  of 2G Verdict…