பொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில அவசரத் தீர்ப்புகளே காரணம்: மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் சிலவற்றினால் நாடு பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்பட்டது என்று மூத்த வழக்கறிஞர் சால்வே சாடியுள்ளார்.

அதாவது 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளில் கொடுத்த தீர்ப்புகளை சுட்டிக்காட்டி சால்வே தன் விமர்சனத்தை முன்வைத்தார்.

ஒரே சமயத்தில் டெலிகாம் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட122 உரிமங்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதே காரணம் என்று சால்வே சாடுகிறார்.

சட்ட இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியதாவது:

நான் உச்ச நீதிமன்றத்தை மட்டுமே இதற்கு குற்றம் சுமத்துவேன், ஒட்டுமொத்தமாக உரிமங்கள் அனைத்தையும் ரத்து செய்த உத்தரவே காரணம்,

அயல்நாட்டு முதலீடு வருகிறது என்றால் நம் சட்டம் என்ன கூறுகிறது எனில் இந்திய நிறுவனம் கூட்டு இருக்க வேண்டும் என்று.

இந்நிலையில் இங்குள்ள நிறுவனம் அல்லது நிறுவனங்கள் உரிமங்களை எப்படிப் பெற்றது என்பதை அயல்நாட்டு முதலீட்டாளர் அறிய முடியாது.

அயல்நாட்டினர் பில்லியன் டாலர்கள் கணக்கில் முதலீடு செய்திருந்தனர். பேனாவிலிருந்து புறப்பட்ட ஒரே தீர்ப்பினால் உச்ச நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டது.

என்று கூறினார் ஹரிஷ் சால்வே.

2010 அறிக்கையில் சிஏஜி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகளினால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்தது. இதனையடுத்து 2011-சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பிப்ரவரி 2012-ல் உச்ச நீதிமன்றம் அனைத்து 122 உரிமங்களையும் ரத்து செய்தது.

ஹரிஷ் சால்வே தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக அப்போது தோன்றி வாதாடினார். டிசம்பர் 2017-ல் சிபிஐ விசாரணை நீதிமன்றம் அ.ராசா, கனிமொழி ஆகியோருடன் 15 பேரை விடுவித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சால்வே மேலும் கூறும்போது, “இந்தியாவின் மிகப்பெரிய வலுவே நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான். ஆனால் வோடபோன் வழக்கு இந்த நம்பிக்கைக்கு அடியாக விழுந்தது” என்றார்.

வர்த்தகம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் சீரற்ற முறையில் கையாண்டதால் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பெரிய கவலையாக மாறியது என்று கூறிய சால்வே,

“நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டையும் ஒற்றைத் தீர்ப்பில் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம், அதாவது வழக்கின் தராதரங்களை ஆராயாமல் உடனே ரத்து செய்தது.

இதனால் நிலக்கரித் துறையில் உண்மையான முதலீடு இல்லாமல் போனது. அடுத்து என்ன ஆனது? இந்தோனேசிய மற்றும் பிற நிலக்கரி விலைகள் குறைந்தன. இதனால் இறக்கு மதி செய்வது மலிவானது.

இதனால் என்ன ஆனது? பொருளாதாரத்தில் நிலக்கரி இறக்குமதி தாக்கம் செலுத்தியதோடு வேலையிழப்புகளும் ஏற்பட்டன என்று கூறிய ஹரிஷ் சால்வே

கோவாவில் இரும்புத்தாது சுரங்க குத்தகைகளையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது மிகப்பெரிய தவறு” என்றார்.

ஆகஸ்ட் 2014-ல் 1993 முதல் 2011 வரையில்னால 218 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் சட்டவிரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

செப்டம்பர் 2014-ல் 4 உரிமங்கள் நீங்கலாக மற்ற உரிமங்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.