முக்கிய செய்திகள்

“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்

“எனதருமைத் தோழியே..“ (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்


நியூயார்க் விமான நிலையத்தில் பயணச் சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறத் தனது குடும்பத்துடன் காத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி . மனமெல்லாம் மகிழ்ச்சி.,

15 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்ள தனது கிராமத்திற்கு பயணமாகிறேன். அமெரிக்கா வந்து 15 வருடங்கள் ஓடிவிட்டன. மகன் கிரிஷ்-க்கு 13 வயது,மகள் தனுஸ்ரீக்கு 10 வயது இருவரும் அமெரிக்காவில் பிறந்து குடியுரிமை பெற்றுள்ளனர்.

என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்ததால் அழைத்துச் செல்வதில் சிரமம் இருக்கும் என்று எண்ணித் தாய்,தந்தையைக் கூடப் பார்க்கச் செல்லவில்லை .

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அமெரிக்க வாழ்க்கையோடு நான் ஒன்றிப் போய்விட்டேன் என்றே சொல்லலாம்.

ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும் பிறந்த மண்ணை யாராலும் நேசிக்காமல் இருக்க முடியுமா? ஒவ்வொரு நாளும் என் கிராமத்தைப் பற்றிய பழைய நினைவுகளை எண்ணிக் கொள்வேன்.

இந்தியா சென்று என் கிராமத்தில் ஒரு மாதம் தங்கியிருக்க ஆசை… ஆனால், கணவனின் வேலை குழந்தைகள் கல்வியென காலம் அதற்கு எனை அனுமதிக்கவில்லை.

இப்போது தான் குடும்பத்தோடு இந்தியாவிற்கு பயணமாகிறேன். மனதில் ஒரு குதுாகலம், ஆனால் சின்ன பயம்.  என் குழந்தைகளுக்கு அங்குள்ள வானிலை ஒத்துக்கொள்ளுமா என்று..

மகன் கிரிஷ் அடிக்கடி கிராமம் பற்றியும் தாத்தா,பாட்டி பற்றியும் ஆர்வமாகக் கேட்பான். தனுஸ்ரீ ஏதும் கேட்கமாட்டாள்.

விமானத்தில் ஏறி அமர்ந்தேன், விமானத்தில் நிறைய இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். 15 வருடங்களுக்கு முன் தமிழர்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது. விமானத்தில் அவர்களின் தமிழ் பேச்சு உள்ளத்திற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நியூயார்க் நகரிலிருந்து அபுதாபி வழியாக சென்னைக்கு 20 மணி நேர விமானப் பயணம் என்பதால் சில நாவல்களை எடுத்துச் சென்றிருந்தேன். அதில் ஒரு நாவலை எடுத்து படிக்கலாம் என்று நினைத்த போது என் கிராமத்தை நோக்கிய நினைவலைகளில் முழ்கினேன்.

நாவல் படிப்பது தான் என் பொழுது போக்கு. சிறுவயதில் கல்கியின் பொன்னியின் செல்வனை பலமுறை படித்துள்ளேன்.

வாசகசாலையில் உள்ள பல கதைப் புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறேன். அப்பா வாங்கும் ஆனந்த விகடன்,குமுத வார இதழ்களின் தீவிர வாசகியாக வாசித்திருக்கிறேன். அமெரிக்கா வந்த பின் ஆங்கில நாவல்களை மெல்ல மெல்லப் படித்து நன்கு படிக்கக் கற்றுக் கொண்டேன். தற்போது இணையத்தில் தமிழ் நாவல்களைப் படித்து வருகிறேன். முகநுாலில் சில தோழிகளுடன் நட்பு வட்டத்தில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வேன்.

எனக்கு பள்ளியிலும் சரி, கல்லுாரியிலும் சரி மிக நெருங்கிய தோழிகள் என்று யாருமில்லை. யாரிடமும் நான் படிக்கும் போது அவ்வளவாக நட்பு கொண்டதில்லை.

என் தோழி என் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள வேப்பமரம் தான். வேம்புவை பெண் தெய்வமாக அதாவது பெண்ணாக வழிபடுவதாலோ என்னவோ என் நெருங்கிய தோழியாக மாறிவிட்டது.

மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது சாதாரண மரமாகத் தோன்றலாம் ஆனால் எனக்கு அது உயிரும், உணர்வுமான தோழியாகவே தோன்றியது.

அப்பத்தா மறைவுக்குப்பின் எனக்கு ஆறுதலே அந்த வேம்புதான். என் சுக துக்கங்களை மௌனமாக வேம்புவிடம் பகிர்வேன். அந்த வேம்பு அதைக் கேட்டு எனக்கு ஆறுதல் அளிப்பதாகவே எண்ணிக் கொள்வேன்.

நான் வீட்டின் தலைச்சாண் பிள்ளை. ஆனால் என்னை விட என் தங்கையைத்தான் கொண்டாடுவார்கள். காரணம் அவள் நல்ல சிவப்பு, நானோ என் அப்பத்தாவைப் போல் கருப்பாக இருப்பேன். சிறு வயதில் என்னை பூங்கொடி என்று அழைத்தவர்களை விட “கருவாச்சி“ என அழைத்தவர்களே அதிகம்..

ஊராரும் சரி,என் உறவினரும் சரி என் நிறத்தை வைத்தே அழைத்தார்கள். சிவப்பாக உள்ள தங்கையைக் கொண்டாடியவர்கள் என்னைச் சீண்டாமலும் இருந்ததில்லை, நிறம் பற்றி பேசுபவர்களைக் கடுமையாக வசைபாடி எனக்கு சமாதானம் செய்வது எனது அப்பத்தாதான். நானும் கருப்புதான், உங்க ஐயா என்னை ரொம்ப விரும்பி கட்டிக்கிட்டாரு என்று அடிக்கடி கூறுவார்.

”நீ” தான்டி என் ராஜாத்தி என அப்பத்தா தாவக்கட்டையைப் பிடித்து கொஞ்சும்போது ஊராரின் பேச்சு எல்லாம் மறந்தே போய்விடும். பள்ளியில் சக பிள்ளைகளிடமும் இந்த நிறவேற்றுமை என்னை மேலும் சிறுமைப்படுத்தியது. அப்பத்தாவின் மடியில் இரவெல்லாம் அழுது அப்படியே துாங்கியிருக்கிறேன்.

அம்மா முதல் அப்பா, தம்பி,தங்கை என அப்பத்தாவைத் தவிர அனைவரும் என்னை நிறத்தை வைத்தே கிண்டல் செய்துள்ளனர்.

பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும் போது அப்பத்தாவின் இழப்பு எனக்குப் பேரிடியாக இருந்தது. ஆதங்கத்தை அப்பத்தாவிடம் சொல்லியழுத நான் முடங்கிப்போய் கொல்லைப்பறத்தில் உள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து அழுவேன்.

அந்த அழுகைக்கு ஆறுதலாக வேம்பின் காற்று என்னைத் தாலாட்டி எனக்கு ஆறுதல் கூறியது போல் தோன்றியது. வேம்புவைக் கட்டியணைத்து உச்சி நுகர்ந்தேன். எனக்குள் ஒரு சிலிர்ப்பு மனதில் ஒரு புதுமையான உற்சாகம் கரைபுரண்டோடியது. அன்றிலிருந்து என் அருமைத் தோழியாகவும் தாயாகவும்,சகோதரியாகவும்,இறந்து போன அப்பத்தாவாகவும் எனக்குத் தோன்றியது வேம்பு.

கல்லுாரி நாட்களில் நான் வீட்டில் உள்ளவர்களிடம் பேசியதைவிட வேம்புவிடம் பேசியதே அதிகம். பள்ளி நாட்களிலிருந்தே எனக்குள் உண்டான தாழ்வு மனப்பான்மையே கல்லுாரியிலும் யாரிடமும் நெருங்காமல் போனதற்கு காரணமாக அமைந்தது.

கருப்பு நிறம் கொண்ட பெண் இந்த நாட்டின் சாபக்கேடு போல் பார்த்தார்கள் சிலர். நானும் பேர் அண்ட் லவ்லி வாங்கி முகத்தில் தடவி தினமும் கண்ணாடியில் பார்த்துக்கொள்வேன்.

என் மேக்கபைப் பார்த்து என் வீட்டில் உள்ளவர்கள் நக்கலாக சிரிக்கும் போது எனக்குள் ஒரு பூகம்பமே தோன்றி மறையும்.

ஆனால் நாளாக நாளாக எனக்கு அது பழகிப் போய்விட்டது. கல்லுாரி முடித்த கையோடு எனக்கு கல்யாணம் செய்து வைக்க என் வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள்.

ஆரம்பத்தில் வந்த ஓரிரண்டு மாப்பிள்ளைகளில் ஜாதகம் ஒத்து வரவில்லையெனக் கூறி விலகிச் சென்றனர். ஆனால் பின்னர்தான் தெரிந்தது. அவர்கள் நான் கருப்பாக இருப்பதைச் சொல்லாமல் ஜாதகத்தைச் சொல்லியிருக்கிறார்கள் என்று.

வருகிற மாப்பிள்ளைகள் எல்லாம் தள்ளிப்பொவதை எண்ணி என் அப்பா துாரத்து உறவினர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுக்கப் பேசினார். அதுவும் மனைவியை இழந்த 3 மாதத்திற்குள்,சரி அவரின் குழந்தைக்காகக் கட்டிக்கொள்ளலாம் என என்னைத் தேற்றிக் கொண்டேன்.

ஆனால் அவரோ என்னை கருப்பு என்றுகூறி மறுத்துவிட்டார். கேவலம் நிறத்தை வைத்துப் பார்க்கும் இவனெல்லாம் மனுசனா..அம்மாடி.. தப்பித்தோம் என்று நினைத்தேன். இரவு 11மணி இருக்கும் எனக்கு துாக்கம் வராமல் வேம்புவை பார்த்தபடி மனதிற்குள் பேசினேன். மௌனமாக என் கேள்விகளுக்கு மனதின் வழியே வேம்பு ஆறுதல் கூறியது போல் இருந்தது.

நிறத்தை வைத்து இந்நாட்டில் எத்தனை பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சாதாரண மெலானியன் துகள்கள் சருமத்தில் அதிகம் இருப்பவர்கள் கருப்பாக இருப்பார்கள் எனத் தெரிந்தும் படித்த முட்டாள்கள் பலரும் நிறம் தேடி அலைகின்றனர்.

வரலாற்றில் அழகியாகக் கொண்டாடப்படும் கிளியோபட்ராவின் நிறம் கருப்பு என்பதாகத் தானே கூறுகின்றனர்.  இன்னும் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இவர்களைத் திருத்த முடியாது என எண்ணிக்கொள்வேன்.

இந்தக் காலகட்டத்தில் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு வரன் எதுவும் அமையாததால் சாடைமாடையாகப் பேசினர் . இந்நிலையில் சென்னையிலிருக்கும் எனது துாரத்து உறவினர் பையனுக்கு என்னை பெண் கேட்டு வந்தனர்.

இந்த வரனாவது இவளுக்கு அமையுமா என அப்பாவிடம் அம்மா கேட்டது என் காதில் விழுந்தது. மறு நாள் காலையில் அப்பா பரபரக்க வீடு வந்து சேர்ந்தார். என்னை அலங்கரித்து ரெடியாகச் சொன்னார்கள். இதில் கொடுமையென்னவென்றால் என் தங்கையை அடுத்தவீட்டில் இருக்க வைத்ததுதான்.

மாப்பிள்ளை வந்தார் நான் அவர் முன் கூனிக்குறுகி நின்றேன். ஏனென்றால் உள்ளுர் மாப்பிள்ளைகளே நிறத்தைக் கூறிப் புறக்கணித்ததால், இவருக்கா நம்மைப் பிடிக்கும் என நினைத்தேன்.

ஆனால் மாப்பிள்ளையோ என்னைப் பிடித்திருப்பதாகக் கூறினார். ஆனால் மாப்பிள்ளையின் அக்கா முகம் மட்டும் கடுமையாக இருப்பதைக் கவனித்தேன். அவரின் அம்மா கல்யாணத்தை எப்போ வைத்துக்கொள்ளலாம் என நேரிடையாகவே விசயத்திற்கு வந்தார்கள். என் அப்பாவோ திணறினார். பின்னர் சுதாகரித்துக் கொண்டு அடுத்த மாதம் வைத்துக் கொள்ளலாம் என்றார்.

அப்பா நம்மிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது. தொலைத்தால் சரியென்று நினைத்தோர்களோ என்னவோ..

மாப்பிள்ளை நல்ல நிறம் என்றார்கள் நான் மாப்பிள்ளையைக் கவனிக்கவில்லை. மாப்பிள்ளை பெயரை மட்டும் கேட்டேன் சுதாகர் என்றார்கள்.

கொல்லைக்குச் சென்றேன் தோழி வேம்புவிடம் இந்த மாப்பிள்ளை ஒத்துவருமா எனக் கெள்வியெழுப்பினேன். வேம்பு கிளைகளை அசைத்து மெல்லிய காற்றின் மூலம் எனக்கு சம்மதம் தெரிவித்தது போல் உணர்ந்தேன்.

கல்யாணத்திற்கு வந்த உறவினர்கள் என் நிறத்தையும் மாப்பிள்ளை நிறத்தையும் பற்றி பேசினார்கள்.எனக்கு என்னவோ போல் இருந்தது. திருமணம் முடிந்தது.

இரண்டு நாட்களில் நான் கணவருடன் அப்பாவீட்டிற்கு வந்தேன். முதல்நாளிலேயே எனது தோழி பற்றி கூறியிருந்தேன் ஆச்சரியமாகப் பார்த்த கணவர் அப்பா வீடு வந்ததும் “எங்க உன் தோழியை எனக்கு அறிமுகப்படுத்தி வை” என்றார். இவர் கிண்டல் செய்கிறாரோ என நினைத்தேன். அவரை அழைத்துக் கொண்டு கொல்லைக்குச் சென்று வேம்புவைத் தொட்டுக் காட்டினேன். என் கணவரும் வேம்புவைப் பார்த்து விட்டு என்னை நோக்கிப் புன்னகைத்தார்..

எனக்கு வேம்பு தன் பூக்களை உதிர்த்து எங்களை ஆசிர்வதிப்பது போல் இருந்தது. அப்பாவீட்டில் இருந்த இரண்டு நாட்களில் நானும் அவரும் வேம்பின் கீழே அமர்ந்து பேசினோம். அப்பாவீட்டில் விடைபெறும் போது வேம்புவை நினைத்து அழுதேன். பேசும் இவர்களை விட பேசா என் தோழியை நினைத்தேன். கண்ணீரோடு சென்னை சென்றேன்.

சென்ளையிலிருந்து இரண்டு முறைதான் கிராமத்திற்கு வந்தேன். வந்த நாட்களில் கூட வீட்டில் உள்ளவர்களை விடவேம்புவிடம்தான் அதிக நேரத்தைக் கழித்தேன்.

கணவருக்கு சில மாதங்களில் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அவர் அமெரிக்கா சென்று 3 மாதங்களில் என்னையும் அழைத்துக்கொண்டார்.

இந்தியாவிலிருந்த நிறபேதம் அமெரிக்காவில் இல்லை கருப்பின மக்களும் வெள்ளையின மக்களும் ஒன்றாகவாழ்வதை எண்ணி வியந்தேன்.புது உலகம்,புதுமையான வாழ்க்கை என நாட்கள் இனிமையாகக் கழிந்தன .

வந்த ஒரு வருடத்தில் கிரிஷ் பிறந்தான்,அடுத்து தனுஸ்ரீ என 15 வருடங்கள் ஓடிவிட்டன. என நினைத்தபடியே துாங்கிப்போனாள். விமானம் திடீரென குலுங்கியதால் விழித்துக் கொண்டாள்.

பிள்ளைகளைப் பார்த்தால் அவர்களும் துாங்கியிருந்தனர். ஒரு வழியாக சென்னை வந்திறங்கினோம். அப்பாவும்,மாமாவும் அழைக்க வந்திருந்தனர்.

காரில் நேராகக் கிராமத்திற்கு பயணமானோம். விமானத்தில் தோன்றிய நினைவலைகள் திரும்பத் திரும்ப வந்தன. மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். நவம்பர் மாதம் என்பதால் சாரல் மழை பெய்துகொண்டிருந்தது.

ஊருக்குள் கார் நுழைந்தது. மண் வீதிகள் எல்லாம் சிமெண்ட் தளங்களாக மாறியிருந்தன. முள் வேலிகள் எல்லாம் காம்பவுன்ட் சுவர்களாக மாறியிருந்தன. குடிசை வீடுகளே இல்லை,கிராமமே மாறியிருந்தது. வீட்டுக்கு முன்பு நின்ற மரங்களைக் காணோம்.

வீட்டை விட்டு இறங்கியவுடன் தங்கை கட்டியணைத்தாள் .அவளிடம் வேகமாக விடைபெற்று என் தோழியான வேம்புவைக் கண்டேன். என்னைக் கண்ட வேம்பு அப்போது அடித்த காற்றில் தன் இலைகளில் தேக்கி வைத்த நீரை என் மீது தெளித்து என்னை ஆரத்தழுவிக் கொண்டது போல் இருந்தது.

என் பார்வையில் வேம்பு நன்றாகக் கனத்து நிறைய கிளைகளுடன் பரந்து விரிந்து காணப்பட்டது.

15 வருடங்கள் கழித்துத் தோழியான வேம்புவைக் கண்டு உள்ளம் பூரித்துப் போனேன்.

வேப்பமரத்தடியில் குழந்தைகளுடன் அமர்ந்து மகிழ்ந்தேன்.வேம்புவை பலமுறைத் தொட்டுப் பார்த்தேன் .

வேம்புவுடன் நின்று பல செல்பி போட்டோக்களை எடுத்துக் கொண்டேன். வேம்புவை வீடியோவில் பதிந்தேன்.

ஒரு மாதமும் என் தோழியுடன் கழித்தேன். அமெரிக்கா கிளம்புமுன் தோழியைத் கட்டியணைத்தேன். எனதருமைத்தோழியே என்னை வாழ்த்தி, அனுப்பியது போல் உணர்ந்தேன். உனக்காக காத்திருப்பேன் தோழி எனச் சொல்லாமல் சொன்னது இலையும்,கிளையும்.

நீங்கா நினைவுகளுடன் நியூயார்க் திரும்பினேன். குழந்தைகளும் நல்ல உடல் நலத்தோடு திரும்பியது அதிக சந்தோஷ்சத்தையளித்தது. மீண்டும் ஊருக்கு எப்போது செல்வோம் என அடிக்கடி மனதில் தோன்றியது.

ஓருவாரம் கழித்து அப்பாவிடமிருந்து போன் வந்தது. இந்தியாவில் இப்போது காலை நேரம் அப்பா எதுக்கு இந்த நேரத்தில் போன் அடிக்கிறாங்க.. என்று எண்ணிக் கொண்டு போனை எடுத்தேன் அப்போது அப்பா “நல்லாயிருக்கியாமா, குழந்தைகள் நலமா” என விசாரித்தார்.

பதிலுக்கு நானும் ”அங்கே எல்லோரும் நலம்தானே ” என ஒருவித பதற்றத்துடன் கேட்டேன். அதற்கு அப்பா ”இல்லம்மா ” என்று தயக்கத்தோடு பேச ஆரம்பித்தார்.

நேத்து ராத்திரி பெய்த கனமழையிலே நம்ம கொல்லையில இருக்கும் வேப்பமரம் விழுந்திருச்சுமா” என்றார்.

எனக்கு ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை மனது படபடவென அடித்தது. மயக்கம் வருவது போல் தலை சுற்றியது. ”என்னப்பா சொல்ரீங்க“ என ஓ வென அழுது கத்தியபடி கேட்டேன்..

நான் அழுததைக் கேட்டு விட்டு அப்பா கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தாங்க.. பின் ” அழாதேம்மா .. காற்றோடு அடித்த மழையில மரம் சாய்ந்து பக்கத்து விட்டு கரண்ட் வயர்மேல விழுந்துருச்சுமா.. கரண்ட் காரங்க வந்தவுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தனும்மா” என்று சொன்னாங்க..

நான் இடிந்து போனேன், அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கணவருக்கு போன் அடித்து அழுதபடி வேம்பு விழுந்த விபரத்தைக் கூறிறேன். அவர் உடனே வரேன் என்று கூறி போனை வைத்து விட்டார்.

எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. தோழியே என்னைப் பிரிய உனக்கு எப்படி மனம் வந்தது.என்று புலம்பினேன். சிறிது நேரத்தில் கணவர் வந்தார். அவரைக் கட்டிப்பிடித்துக் கதறினேன். அவர் ஆறுதல் கூறினார். மனம் ஏற்கவில்லை ஒருவாரம் அவ்வப்போது அழுவேன்.

அம்மாவும்,அப்பாவும் போன் பண்ணி ஆறுதல் சொன்னார்கள். இப்பவெல்லாம் அடிக்கடி என் லேப்டாப்பில் பதிவேற்றிய தோழி வேம்புவின் வீடியோ பார்த்து பார்த்து அழுகிறேன்..

காலத்தில் கரைந்து போன எனதருமைத் தோழியே …