முக்கிய செய்திகள்

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

 

என். விஜயா, குழந்தைகள் நல ஆலோசகர்

ஒரு கல்வியாண்டு முடிந்திருக்கிறது. ஓர் ஆணடின் உழைப்புக்கான அறுவடையும் நடந்துவிட்டது. தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. யார் என்ன மதிப்பெண்கள் என்ற விசாரிப்புகளும் விவாதங்களும் குடும்பங்களில் தொடரும். என்ன படிப்பைப் படிக்கலாம், எந்தக் கல்லூரியில் படிக்கலாம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேரலாமா, ரஷ்யாவில் மருத்துவம் படிக்கலாமா என்பன போன்ற எக்கச்சக்கமான கேள்விகள் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இருக்கும். உண்மைதான். வாழ்க்கையை மாற்றப்போகிறத காலகட்டம். இதுவொரு முக்கியமான பருவம்.

தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக குடும்பத்தையே ஷிப்ட் செய்து சென்னைக்கும் வேறு நகரங்களுக்கும் வருகிறவர்கள் இருக்கிறார்கள். இன்று குழந்தைகளுக்கான சொத்து என்பது கல்வியாக மாறியிருக்கிறது. வரவேற்கக்கூடிய விஷயம். ஆனால் மதிப்பெண்களும், படிப்பும்தான் வாழ்வதற்கான ஒற்றையடிப்பாதை என்ற நினைப்பது தவறாக முடிகிறது. நமக்கான விருப்பமும் அதில் இருப்பதை உணரவேண்டும். பிடித்தமில்லாத படிப்பால் முன்னேற்றம் கிடைக்காது. என்ஜினீயரிங் படித்து விட்டு ஹோட்டல் நடத்துகிறவர்கள் இருக்கிறார்கள். டாக்டர் படித்துவிட்டு வேறு தொழில் பக்கம் நகர்ந்தவர்கள் இருக்கிறார்கள். எதுவும் மாற்றக்கூடியதே. மாறக்கூடியதே.

கேம் சேஞ்சர் என்று சொல்லாம். அதுதான் பிளஸ் டூ. சிலருக்கு குழப்பமும் சிலருக்கு தெளிவும் இருக்கிறது. மூன்றுவிதமாக படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது இருக்கிறது. முதலாவது பெற்றோருக்கு என்ன படிப்பு பிடிக்கிறது. நமக்கு என்ன படிப்பு பிடிக்கும், என்ன படிப்பு வரும் என்ற மூன்றுவிதமான கூறுகள் உள்ளன. நிதானமாக யோசித்து முடிவெடுக்கவேண்டிய தருணம். இந்தப் படிப்பைப் படித்தால் அதிகம் சம்பளம் கிடைக்கும் என்றும், இந்தப் படிப்புக்கு உடனடி வேலைவாய்ப்பு என்றும், இந்தப் படிப்புக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்றும் முடிவெடுக்கக்கூடாது. எந்தப் படிப்பையும் முழுமையாக படித்தவர்கள் வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.

இன்று கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் வேறுபாடில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நுழைவுத்தேர்வுகள், புதிய படிப்புகள் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. கல்வி என்பது படிக்கும்போது கசப்பானதாகத் தோன்றும். ஆனால் அதன் கனி இனிப்பானது. மிகப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கக்கூடியது. முழுநேரப் படிப்பு என்றில்லை, நீங்கள் வீட்டில் இருந்தே படித்து முடிக்க எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன. குறுகியகாலத்தில் படிக்கவும் முடியும்.  

ஒருகாலத்தில் கடினமான வேலையை பெண்கள் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடும் நம்பிக்கையும் இருந்தது. இன்றில்லை. விமானம் ஓட்டுகிறார்கள். லாரி ஓட்டுகிறார்கள். பெண்கள் இல்லாத துறையே இல்லை. விண்வெளி  ஆராய்ச்சியில் இருக்கிறார்கள். என்ஜினீயரிங் மட்டும்தான் பெரிய வாய்ப்பாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு காலத்தில், இன்று என்ஜினீயரிங் கல்லூரிகள் காற்று வாங்குகின்றன. காரணம், சரியான முறையான கல்வி கற்பித்தல் இல்லை. திறனற்ற வெறும் பட்டதாரிகளை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்?

ஆர்வம் இருக்கிற எந்த துறையும் மாணவர்கள் ஈடுபடலாம். இசை, நடனம், சினிமா, எழுத்து, ஒளிப்பதிவு, எடிட்டிங், ஓவியம், சிற்பம் என எத்தனையோ துறைகள் இருக்கின்றன. எத்தனையோ என்ஜினீயரிங் பட்டதாரிகள் சூப்பர் சிங்கர்களாக உருவாகியிருக்கிறார்கள். இதுதான் இது இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமை இப்போது இல்லை என்பதை உணருங்கள். நான் சொல்வது எதார்த்தம். நீங்கள் அன்றாடம் பார்க்கக்கூடிய எதார்த்தம்.

சுயஅலசல் ரொம்பவும் முக்கியம். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதையும் நம்பவேண்டாம். மென்பொருள்கள் மாறிக்கொண்டே இருக்கிறன்றன. கம்ப்யூட்டர் கல்வியும் நாளுக்கு நாள் புதிய மென்பொருள்களுடன் வருகிறது. இன்றைய தொழில்நுட்பத்தில் ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ், பிக் டேட்டா, இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், சைபர் க்ரைம், ஹேக்கிங் என பல புதிய படிப்புகள் உருவாகியுள்ளன.

எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது என்ற கழிவிரக்கத்தைக் கைவிடுங்கள். உலகம் உங்களுக்கு முன்னால் கைகூப்பி அழைக்கிறது. அந்த அன்பின் குரலை செவிமடுங்கள்.

தொடரும்