வெள்ள பாதிப்பு : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் பேட்டி..

ஸ்டாலின் பேட்டி..
“கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோருவதற்கும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்துவரும் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு, நிவாரண பணிகள் குறித்து எடுத்துக் கூறி பிரதமர் மோடியிடம் ஆலோசிப்பதற்கு டெல்லி சென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த டிசம்பர் 4-ம் தேதி அன்று புயலும், அதன்காரணமாக கடுமையான மழையும் ஒருநாள் முழுக்க பெய்தது. அதற்கு முன்பே, தமிழக அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பெருமளவு சேதம் தடுக்கப்பட்டது. மக்கள் பேராபத்தில் இருந்து காக்கப்பட்டனர். இதனை ஒன்றிய அரசு சார்பில் சேதத்தை பார்வையிட்ட மாநில அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. மழை நின்றதும் உடனடியாக நிவாரண பணிகள் தொடங்கப்பட்டன. மறுநாளே போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. 98% மின் இணைப்பானது மூன்று நாட்களுக்குள் சரிசெய்யப்பட்டது. புறநகரில் ஒருசில பகுதிகள் நீங்கலாக, மற்ற பகுதிகளில் நான்கைந்து நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பின. தண்ணீரில் மூழ்கியிருந்த பகுதி மக்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்தோம். அவர்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தோம். நானே பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோதனையிட்டேன். 20 அமைச்சர்கள், 50 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், 20000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் களப்பணியில் ஈடுபட்டனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

புயலுக்கு முன்னும், பின்னும் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக பாதிப்புகள் பெருமளவு குறைந்தன. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு இடங்களை பார்வையிட்டார். அவருடனான சந்திப்பின்போது, வெள்ள சேதங்களை சரிசெய்ய முதல்கட்டமாக ரூ.5,050 கோடி தேவை என்று வலியுறுத்தினேன். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதினேன். திமுக எம்பிக்கள் மூலமாக பிரதமரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.