முக்கிய செய்திகள்

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததால் பலர் உயிரிழப்பு..

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் இன்று காலை மக்கள் கூட்டத்துக்குள் சாலையில் வேகமாக வந்த கார் புகுந்ததில், பலர் பலியாகி இருக்கலாம், ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இது தீவிரவாதிகள் தாக்குதலா அல்லது ஏதேச்சையாக நடந்த விபத்தா என்பது குறித்து முன்ஸ்டர் நகர போலீஸார் கூற மறுத்துவிட்டனர். இந்தவிபத்தில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெர்மனியின் மேற்குபகுதியில் இருக்கும் நகரம் முன்ஸ்டர். இந்த நகரில் இன்று காலை வழக்கம் போல் மக்கள் பஸ்நிலையத்தில் நின்றிருந்தபோது, சாலையில் வேகமாக வந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து நிற்காகமல் சென்று.

திடீரென கார் கூட்டத்துக்குள் புகுந்ததால், மக்களால் ஓடமுடியாமல் தவித்தனர். பலர் காரில் அடிபட்டு தூக்கிவீசப்பட்டனர். இந்த விபத்தில் பலர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து முன்ஸ்டர் நகர போலீஸ் தரப்பில் கூறுகையில், கூட்டத்துக்குள் கார் புகுந்ததால், பலர் இறந்துள்ளனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால், இந்த தீவிரவாத தாக்குதலா என்று இப்போது உறுதி செய்ய முடியாது. மக்கள் தாங்களாக எதையும் ஊகம் செய்து கொண்டு பதற்றம் அடையத் தேவையில்லை. காரை ஓட்டி வந்த டிரைவர் தற்கொலை செய்துள்ளார்.

அதேசமயம், இது தீவிரவாத தாக்குதலாக இருக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட முடியாது எனத் தெரிவித்தனர்.