குஜராத்தில் காங்கிரஸ்-ஹர்திக் ஆதரவாளர்களிடையே மோதல்..


குஜராத்தில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்களிடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவு 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக-விற்கு சவாலாக உருவெடுத்துள்ள பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல், காங்கிரஸ் உடன் கைகோர்த்து உள்ளார். பட்டேல் சமூகத்திற்கான இடஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகள் ஒதுக்கீடு ஆகிய 2 கோரிக்கைகளையும் காங்கிரஸ் ஏற்கும் பட்சத்தில் அக்கட்சிக்கு ஆதரவு என்ற அடிப்படையில் இருதரப்பும் பேச்சு நடத்தி வந்தன. 2 கோரிக்கைகள் தொடர்பாகவும் காங்கிரஸ்-ஹர்திக் பட்டேல் தரப்பு இடையே நேற்றிரவு சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும் கூட்டணியையும் இடஒதுக்கீடு தொடர்பான உடன்பாட்டையும் ஹர்திக் பட்டேல் இன்று முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் கட்ட தேர்தலுக்கு 77 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் அறிவித்தவுடன் நிலைமை தலைகீழாகிவிட்டது. பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தொகுதி வழங்கப்படவில்லை எனக் கூறி, படிதார் அனாமத் அந்தோலன் சமிதி தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும்காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே சூரத், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் மோதல் வெடித்தது. சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் அலுவலகம் சூறையாடப்பட்டது.
இந்த எதிர்பாராத மோதலால், காங்கிரஸ் உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக ஹர்திக் பட்டேல் இன்று அறிவிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.