முக்கிய செய்திகள்

குட்கா விவகாரத்தில் மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் ..


குட்கா விவகாரத்தில் மேலும் இரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

சென்னை அருகே பதுக்கி வைக்கப்பட்டு குட்கா குடோன்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பானவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. குடோன் உரிமையாளர்களில் ஒருவரான மாதவராவ் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

அதில், சென்னையில் குட்கா விற்பனை செய்வதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது.

அந்த டைரியை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள், அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் குட்கா விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் தகவல் அளித்தனர். தமிழக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அனுப்பிய கடிதங்கள் காணாமல் போனதாக தமிழக அரசு கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசு இந்த விவகாரத்தை உரியமுறையில் விசாரிக்க ஆர்வம் காட்டவில்லை என எதிர்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருமான வரித்துறையினரிடம் சிக்கி டைரியில் இருந்த விவரங்கள் மூலம், லஞ்சம் வாங்கியவர்களில் மேலும் இரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னையில் குட்காவை தங்கு தடையின்றி விற்பனை செய்வதற்கும், செங்குன்றம் குடோன்களில் இருப்பு வைப்பதற்கும், காவல்துறை உதவி ஆணையருக்கு 92 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருப்பதும், காவல்துறை இணை ஆணையர் இருவருக்கு 65 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி முதல் 2016-ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வரையிலான காலத்தில் இந்த லஞ்சப் பரிமாற்றம் நடந்துள்ளது.

மொத்தமாக 39.1 கோடி ரூபாய் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள், குட்கா நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.