சதுப்புநிலப் பகுதியில் அரசு கட்டடம் கட்டுவதற்கான அரசாணை ரத்து: வேலியே பயிரை மேயலாமா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு கண்டனம்

பக்கிங்காம் கால்வாய் ஓரமாக சதுப்புநிலத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வேலியே பயிரை மேயலாமா எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பக்கிங்காம் கால்வாய் ஓரமாக சதுப்புநிலத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

இந்நிலையில், 2013ம் ஆண்டு நீலாங்கரை, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் பகுதிகளில் சதுப்பு நிலங்களில் அரசு அலுவலகங்கள் கட்டும் முடிவை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சதுப்புநிலப் பகுதியில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் கட்ட அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள், நீராதாரங்களை பாழ்படுத்தும் நடவடிக்கைகளை அரசே மேற்கொள்வது குறித்து வேதனை தெரிவித்தனர். வேலியே பயிரை மேய்வது போன்ற நடவடிக்கையாக இது உள்ளது என்றும் நீதிபதிகள் அப்போது தெரிவித்துள்ளனர்.