இந்தி எந்த வடிவில் வந்தாலும் எதிர்போம்: ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

இந்தியை திணிக்க முயன்றால் டெல்லிக்கு சென்று போராடுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு, ஒரே நுழைவு தேர்வு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது; 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

இந்தி எந்த வடிவில் வந்தாலும், எங்களுடைய பதில் ‘இந்தி தெரியாது போடா’ என்பதுதான். இந்தி தெரியாது போடா என உங்களிடம் சொல்லி கொண்டேதான் இருப்போம். மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம். 2010 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம். ஒன்றியம் என்று சொன்னால் தான் கோபம் வரும். அதனால் ஒன்றிய அரசு என்று தான் சொல்லுவோம். முன்பு போல் இங்கு ஆட்சியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி அல்ல. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என கூறினார்.

தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், கூடினோம், கலைந்து சென்றோம் என்று கண்டிப்பாக இருக்கமாட்டோம். நீங்கள் எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழகத்திற்குள் கொண்டு வந்தாலும், நாங்கள் உங்களிடம் சொல்லப்போகிற ஒரே வார்த்தை ” இந்தி தெரியாது போடா”. அதை எப்போதுமே சொல்லிக் கொண்டேயிருப்போம்.

3 மொழிப்போர்களை சந்தித்தது திமுக.அதில் இரண்டை நடத்தியது திமுகவின் மாணவர் அணிதான். தற்போது மாணவர் அணியுடன் இளைஞர் அணியும் சேர்ந்து இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கியிருக்கிறோம். இந்த இரு அணிகளும் இணைந்து கடந்த 4 ஆண்டுகளில் எடுத்த அனைத்து போராட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த போராட்டத்திலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

முதல்கட்டப் போராட்டம் கலைஞர் அவர்கள் கட்டிக் கொடுத்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியிருக்கிறோம். நீங்கள் இந்தி திணிப்பை கையில் எடுத்தால், அடுத்தக்கட்ட போராட்டம் தமிழகத்தில் மட்டும் நடக்காது, தலைவரின் ஆணையைப் பெற்று டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம்.

தமிழக மக்கள் என்றும் உங்களுடைய இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள். எப்படி 2019 தேர்தலில் பாசிச பாஜகவை எப்படி ஓடஓட விரட்டி அடித்தோமோ, அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள் கூறியதைப் போல, 2024 தேர்தல் பிரச்சாரத்துக்கு இது சிறந்த துவக்கமாக இது இருக்கும். 2019 போலவே 2024 தேர்தலிலும் பாசிச பாஜகவை தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள்” என்று அவர் கூறினார்.