முக்கிய செய்திகள்

ரூட்ட மாத்து: வேட்பாளர்தேர்வில் ராகுல் புதிய அதிரடி!

 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நெருங்கும் நிலையில், அதனைச் சந்திப்பதற்கான அதிரடி வியூகங்களை ராகுல் வகுத்து வருகிறார்.

காங்கிரஸ் என்றால் டெல்லியில் முகாமிட்டு மேலிடத்திடம் சீட் கேட்டு பெறுவதும், அதற்கான லாபியை அங்கிருந்தே செய்து முடித்து விட்டு மாநிலங்களுக்கு திரும்புவதும்தான் அவர்களது கலாச்சாரமாக இதுவரை இருந்து வருகிறது. இந்த முறையில் தலைகீழ் மாற்றத்தை கொண்டு வர ராகுல்காந்தி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் நடைபெறும் மூன்று மாநிலங்களுக்கும் தனித்தனித் தனியாக தேர்வுக் கமிட்டிகளை அமைத்து, அந்தக் குழுக்களின் மூலமாக முற்றிலும் சுதந்திரமான முறையில்  வேட்பாளர்களைத் தேர்வு செய்வது என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டாகி விட்டது.

ராஜஸ்தானுக்கு மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா தலைமையிலும், மத்தியப் பிரதேசத்தில் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தலைமையிலும், சத்தீஸ்கருக்கு அசாம் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வர் கலிதா தலைமையிலும் மூன்று தேர்வுக் குழுக்களை ராகுல் காந்தி அமைத்துள்ளார்.

இந்தக் குழுக்கள் மூன்று மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் அமைப்புகள் வரையில் கருத்துகளைக் கேட்டு, அவர்களின் விருப்பத்திற்கேற்ப வேட்பாளர்களைத் தேர்வு செய்யப்போகிறது. இதில் பழைய தலைவர்களின் லாபிக்கு சுத்தமாக இடமிருக்கக் கூடாது என ராகுல் கடுமையாக உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர். தகுதி, செல்வாக்கு, உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில்  முற்றிலும் ஜனநாயக பூர்வமான அணுகுமுறையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என ராகுல் கண்டிப்பாக கூறியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வேட்பாளர்கள் தங்களுக்கு சீட் வாங்குவதற்காக டெல்லியில் மாதக் கணக்கில் முகாமிட்டு, கடைசியில் தேர்தல் நடைபெற சில நாட்கள் இருக்கும் போது டெல்லியில் இருந்து திரும்பி, தொகுதிக்கு போய் அவர்களால் வாக்குக் கேட்க முடிகிறது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையக நிர்வாகிகள். இதனால், மக்களைச் சந்திக்கவோ, வாக்குகளைச் சேகரிக்கவோ, கட்சியின் நிலைப்பாடுகளை எடுத்துக் கூறவோ வேட்பாளர்களுக்கு போதிய அவகாசம் இல்லாமல் போய்விடுவதாக கட்சித் தலைமை கருதுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, அந்தந்த மாநிலங்களுக்கான தேர்வுக் குழுக்கள் இப்போதே மாநிலங்களுக்கு சென்று முகாமிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கள ஆய்வைத் தொடங்க இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், கட்சியினர் களப்பணிகளை விட்டு தேவையில்லாமல் டெல்லிக்கு படையெடுத்து, மாதக்கணக்கில் அங்கு முகாமிட்டு நாட்களை வீணடிப்பது தவிர்க்கப்படும் என காங்கிரஸ் தலைமை கருதுவதாகவும் கூறப்படுகிறது.

தேர்வுக் கமிட்டிகள் மூலம் வேட்பாளர்கள் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்டு, மாநில நிர்வாகிகள் களத்தில் இறங்கி முழுமையாக வேலை செய்தால் வெற்றியின் லெவலே வேறு மாதிரி இருக்கும் என காங்கிரஸ் மேலிடம் கணக்குப் போடுவதாகவும் நிர்வாகிகள் கூறுகின்றனர். கணக்கு தப்பாமல் இருந்தால் சரிதான்…!

In major break from tradition, Rahul Gandhi changes candidate selection process 

புவனன்