இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் : வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…

இந்திய நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…

இந்திய நாடாளுமன்றம் 175 நாட்களுக்குப் பிறகு வரும் 14.09.2020 அன்று கூடுகின்றது. காலையில் மக்களவையும் பிற்பகலில் மாநிலங்களவையும் கூடுகின்றது.

மாநிலங்களவையில் கரோனா வைரஸ் தொற்றால் கேள்வி நேரம், பிரச்சினைகள் எழுப்புவது குறித்தான நேரங்கள் தவிர்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் 1962, 1975, 1976, 1991, 2004, 2009 என 6 முறையும் மாநிலங்களவையில் கேள்வி நேரம் ரத்துச்செய்யப்பட்டது. இதே போல மக்களவையிலும் இம்மாதிரி கேள்வி நேரங்கள் சில நேரங்களில் கடந்த காலங்களில் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் 60% எந்த விதமான அலுவல் இல்லாமல் சபை நேரங்கள் வீணாக்கப்பட்டன. 1991ல் இருந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இரு அவையின் அலுவல் பணிகள் தேவையற்ற பிரச்சினைகள், குழப்பங்கள், நாகரீகமற்ற முறையில் இரண்டு அவையிலும் உறுப்பினர்கள் நடந்துக் கொண்ட சம்பவங்களெல்லாம் கடந்த நாட்களில் பார்த்தோம்.

கடந்த 5 ஆண்டு மாநிலங்களவை அமர்வில் 332 அமர்வில் ஒரு அமர்வுக்கு ஒரு மணிநேரம் வீதம் 332 மணிநேரம் கேள்வி கேட்பதற்கு ஒதுக்கப்பட்டும், அதில் வெறும் 133 மணி நேரமும் 17 நிமிடங்கள் தான் அவையில் கேள்வி கேட்க பயன்பட்டது.

தற்போது 18 நாட்கள் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து, எங்கள் உரிமை போய்விட்டது என்று கூறும் உறுப்பினர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சபையை சீராக நடத்த முடியாமல் அவை உறுப்பினர்கள் நடந்துக் கொண்டது நமக்கு தெரியாதா? ஏதோ முழுமையான நேரத்தில் உறுப்பினர்கள் சரியாக அவை நேரத்தை வீணடிக்காமல் நடந்துக் கொண்டது போல் இன்றைக்கு மேலும் கீழும் குதிப்பதில் அர்த்தமில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது என்ன செய்கின்றார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். இதில் பலர் குற்றப் பிண்ணனி உடையவர்கள். காசு கொடுத்து வாக்கு வாங்கி வெற்றிப் பெற்று சென்றார்கள். இதில் பலர் நாடாளுமன்றத்தில் வாய் திறக்காமல், பேசாமல், விவாதத்தில் பங்கெடுக்காமல் எந்த புரிதல் இல்லாமல் வெறும் பொம்மையை போல் இருந்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் தொழில் நிறுவனங்களிடம் பணம் பெற்று நாடாளுமன்றத்தில் கேள்விகள் பிரச்சினைகள் எழுப்புவதுமாக சுயலாபத்தோடு நடந்துக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து விசாரணை நடந்தது.

இந்த நிலையில் இன்றைக்கு ஏதோ அவர்களுடைய உரிமைகள் பாதிக்கப்பட்டது போல குரல் கொடுப்பது சரிதான். ஆனால் கடந்த காலத்தில் நீங்கள் எப்படி நடந்துக் கொண்டீர்கள் என்று திரும்பிப் பார்த்தால் இன்றைக்கு நீங்கள் போலியாக “எங்களுக்கு கேள்வி நேரம் இல்லை” என்று கூக்குரலிடுவது அர்த்தமற்றது தான்.

கடந்த காலங்களில் அவையில் சரியாக நடந்துக் கொண்டீர்களா? அவை சரியாக நடந்ததா? ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து அவை நேரத்தை வீணடிக்காமல் நடந்துக் கொண்டீர்களா என்று மனசாட்சியை தொட்டுப் பாருங்கள்.

கடந்த கால நாடாளுமன்ற ஜனநாயகம் இந்தியாவில் இரு அவை உறுப்பினர்களால், எவ்வளவு வீழ்ச்சி அடைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். உலக நாடுகளில் நாடாளுமன்றம் வாரம் ஒரு முறையோ மாதத்திற்கு ஒரு சில நாட்கள் நடக்கின்ற நடைமுறை உள்ளது. Mother of Parliament என்று அழைக்கப்படும் Westminister British Parliamentல் வாரத்திற்கு இரண்டிலிருந்து ஐந்து நாட்கள் வரை நடப்பது வாடிக்கை. சனி, ஞாயிறு உறுப்பினர்கள் அவர்கள் தொகுதிக்கு செல்லலாம்.

அதே போல ஆஸ்திரேலியாவிலும். அமெரிக்காவில் செனட்டும் காங்கிரசும் ஓரளவு நேரத்தை வீணடிக்காமல் கண்ணியமாக நடக்கின்றன. அங்கே பிரச்சினைகள் நேர்மையாகவும் பொறுப்போடும் அவைகளில் எழுப்பப்படுகின்றன.

கனடாவிலும் இதே முறை தான். இங்கே மட்டும் தான் குழாயடி சண்டை போல நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் நடக்கின்றன. நமக்குத் தான் ஜனநாயகம் என்றாலும் குடியரசு என்றாலும் என்னவென்றே தெரியவில்லையே.. யாரை குறை சொல்ல? நாம் தகுதியானவர்களை நாடாளுமனறத்திற்கு அனுப்பவதில்லையே.

இரா. செழியன் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாமல் அதுவும் தென்சென்னையில் நடிகை வைஜெயந்திமாலா அவரை தோற்கடித்து நாடாளுமன்றம் செல்கின்றார். அங்கே நாடாளுமன்றத்திற்குஅனுப்புபவர்களையும் அரசியல் கட்சிகள் பொம்மைகள் போல இருந்துவிட்டு வர அனுப்பி வைக்கின்றனர்.

இப்படி இருக்கும் போது எங்களுக்கு உரிமையான கேள்வி நேரம் ஒதுக்கவில்லை என்று குரல் எழுப்பும் இவர்கள் கடந்த காலத்தில் நாடாளுமன்ற நேரத்தை இவ்வளவு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கப்பட்டது.

கடந்த காலத்தில் பொறுப்புடன் ஒழுங்குமுறையுடன் நடந்துக் கொண்டார்களா என்பதை மக்கள் மன்றத்தில் சொல்ல வேண்டும். உரிமையைக் கேளுங்கள் தவறில்லை சரிதான். ஆனால் கடந்த காலத்தில் நீங்கள் நடந்துக் கொண்ட முறை என்ன? அதற்கு பதில் சொல்ல முடியுமா?

இந்திய_நாடாளுமன்ற_ஜனநாயகம்

வழக்கறிஞர்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-09-2020
முகநுால் பதிவு