நான் இந்திரா காந்தியின் பேத்தி; என்னை மிரட்டுவது உ.பி. அரசுக்கு காலவிரயம்தான்: சம்மனுக்கு பிரியங்கா காந்தி பதிலடி..

கான்பூரில் அரசுக் காப்பகத்தில் 2 சிறுமிகள் கர்ப்பம் என்று ஊடகச் செய்தியைச் சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் நிலைத்தகவல் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து உத்தரப் பிரதேச மாநில அரசு பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இது தொடர்பாக பிரியங்கா கூறும்போது, “அவர்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும். நான் எப்போதும் உண்மைகளைப் பேசுவேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி, பெயர் அறிவிக்கப்படாத பாஜக செய்தித்தொடர்பாளர் அல்ல.” என்று இந்தி மொழியில் ட்வீட் செய்திருந்தார்.
பிரியங்கா காந்தி தன் ட்விட்டர் பக்கதில் மேலும் கூறிய பொது,

“மக்கள் சேவகராக என் கடமை உ.பி.மக்களை நோக்கியது. அவர்கள் முன்னால் உண்மையை வைப்பதுதான் என் கடமையே தவிர அரசு செய்து வரும் பிரச்சாரத்தை சுமந்து செல்வதல்ல. உ.பி. அரசு தன் பல்வேறு துறைகள் மூலம் என்னை மிரட்டுவதன் மூலம் கால விரயம்தான் செய்து கொண்டிருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தியின் முகநூல் பதிவை அடுத்து உ.பி. குழந்தைகள் உரிமை குழு ’தவறான’ கருத்துக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

உ.பி.யில் கரோனா மரணங்கள் அதிகம் என்று பிரியங்கா காந்தி முன்னதாகக் கூற ஆக்ரா நிர்வாகம் அவரது கூற்றை வாபஸ் வாங்க வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.