முக்கிய செய்திகள்

ஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்கள் வசம் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் எனவும், அதனை உறுதிப்படுத்த ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், தனது தாயான ஜெயலலிதாவுக்கு தங்களது வழக்கப்படி மறுசடங்கு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் ஏதேனும் இருக்கின்றனவா? என அப்பல்லோ நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தது. மேலும், இதுதொடர்பான பதிலை நாளைக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ரத்த மாதிரி தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்கள் வசம் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது