ஜெ., வாழ்ந்த ‘வேதா’ இல்லத்தை நினைவிடமாக்க தமிழக அரசு அவசரச் சட்டம் ..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக்க தமிழக அரசு, அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள மறைந்த முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வீடான, வேதா நிலையம் இல்லம் நினைவிடமாக் கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புரட்சித்தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதன், தலைவராக முதல்வரும், துணைத் தலைவராக துணை முதல்வரும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, வீட்டில் உள்ள அசையும் பொருட்கள் அனைத்தும் அறக்கட்டளைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்கள், ஜெயலலிதா பயன்படுத்திய புத்தகங்கள், நகைகள் என அனைத்தும் நினைவிடத்தில் வைக்கப்படும்.

அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த அவசரச் சட்டம், நிரந்தர சட்டமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.