முக்கிய செய்திகள்

நீண்டநாட்களாக சந்திக்க நினைத்த கவிஞர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

நான் நீண்டநாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த கவிஞர். க்ருஷாங்கினியை சந்திக்கும் வாய்ப்பு இன்று (24-9-2018)கிட்டியது. க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள், இலக்கியம் பேணும் இதழ்களிலும், வெகுஜன பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களில் ஓவியம், நடனம் குறித்த இவரின் கட்டுரைகளும், இவை தொடர்பான பல விமரிசனக் கட்டுரைகள் பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. மொழிபெயர்ப்பையும் விட்டு வைக்காத இவர் ஒரு சகலகலாவல்லி. எழுத்தில் ஆளுமை பெற்றிருக்கும் இவர் நகைச் சுவையுணர்வுடைய, இளமையோடு உறுதியும் கொண்ட எப்போதும் இருபது வயதைத் தாண்டாத இளகிய, மென்மையான, மனதையுடையவர்.

ஆங்கிலத்தில் எஸ். சாரதா எழுதிய கலாசேத்திரா ருக்மணி ஆரண்டேல் நினைவுகளைக் குறித்து இவர் தமிழாக்கம் செய்து சமீபத்தில் நூலாக வெளிவந்தது. அதன் பிரதியை கையொப்பமிட்டு தி.நகர் புக்லேன்டில் நான் வாங்கவேண்டுமென்ற அன்பான அவருடைய கோரிக்கையை ஏற்று பெற்றுக் கொண்டேன். உடன் இலங்கையில், கொழும்பு நகரில் தமிழ் இலக்கியம், கலைத் தளங்களில் இயங்கிவரும் திருமதி. மிதிலா பத்மநாபனும் உடனிருந்து இந்த நூலைப் பெற்றுக் கொண்டார்.

சி.சு. செல்லப்பா தலையில் சுமந்து தன் படைப்புகளை விற்றது போல, இவர் தன்னுடைய புத்தகங்களை ஜோல்னா பையில் வைத்துக் கொண்டு மிக எளிமையாக, மின்சார இரயில் ஏறி வந்து புத்தகக் கடைகளில் விற்கும் பணியை இந்த வயதிலும் தவறாமல் செய்கிறார். இதை ஒரு தவமாகவும் எண்ணுகிறார். அவரின் பணி சிறக்கட்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் – முகநூல் பதிவில் இருந்து நன்றியுடன்….
24-09-2018

K.S.Radhakrishnan received the Poet Krishankini’s Book