முக்கிய செய்திகள்

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி


காலத்தால் அழியாத கலைஞ வாழி

கற்கண்டுத் தமிழாலே கவர்ந்தோய் வாழி

ஞாலத்தில் திருக்குறளை நாட வைக்க

நானிலத்தில் வள்ளுவரின் சிலையும் வைத்தாய்

நீள நினைந்த தனாலே நினைவுச்சின்னம்

நிலைத்திடவே வள்ளுவர்க்குக் கோட்டம் கண்டாய்

ஏழை மக்கள் எளியவர்கள் இன்பங் காண

எத்தனையோ திட்டங்கள் தீட்டி வென்றாய்

வாழுகின்ற வள்ளுவமாய் வாழ்ந்து வென்றாய்

வள்ளுவரின் நெறிபரப்ப வழியும் தந்தாய்

தாழாதே தமிழா நீ நிமிர்ந்து நில்லு

தண்டமிழை என்றைக்கும் படித்து வெல்லு

வீழாது தமிழ் என்றும் வெற்றி கொள்ளும்

வெற்றிக்கு வித்திட்ட தலைவா வாழி

நாளெல்லாம் தமிழ்மக்கள் நலமே நாடி

நல்லாட்சி தந்தாய் நீ எங்கே சென்றாய்

எண்ண வொண்ணா எத்தனையோ புரட்சி செய்தாய்

எல்லோரும் இனம் தாண்டிக் கருவறைக்குள்

எளிதாக நுழைய வைத்த புரட்சி உண்டு

மண்ணுலகில் சமநீதி சமத்துவத்தை

மகத்தான சட்டத்தால் நிலைக்க வைத்தாய்

எண்ணற்ற கோவில்களில் பூசை செய்ய

எல்லோரும் அருச்சகராய் ஆகும் ஆணை

புண்பட்ட தாழ்ந்தோர்கள் பலரும் இன்று

பூரித்து அருச்சகராய் ஆலயத்தில்

பண்ணொத்த தமிழாலே போற்றி கூறி

பலருக்கும் புரியவைத்த புரட்சி செய்தாய்!

கண்ணிழந்தோர் கண்ணொளியைப் பெறவே அன்று

கண்ணொளிர இலவசமாய்ச் சிகிச்சை செய்து

காணாத புரட்சியெல்லாம் காண வைத்தாய்!

திரைத் துறையில் நாடகத்தில் பேச்சரங்கில்

தெள்ளுதமிழ் உரையாடல் பேச வைத்தாய்

கரைகாணாத் தமிழ் மொழிக்குச் செம்மை சேர்க்க

கடும் எதிப்புகளையெல்லாம் துாள் துாள் ஆக்கி

நிறைவாகச் செம்மொழியாம் சிறப்பு ஆணை

வரைவாகப் பெற்ற வள்ளல் வாழி அய்யா

நிறைவாழ்வு உன் வாழ்வு தமிழின் வாழ்வு

நெஞ்சாரப் போற்றுகின்றோம் அய்யவாழி

சங்கத்துத் தமிழுக்குப் புதுமைத் தேடல்

தன் பேனா மையாலே தந்தவன் நீ

பொங்கு தமிழ்க் கடல் ஓசை உந்தன் பேச்சு

புதிய நடை புதுப்பார்வை புலியின் பாய்ச்சல்

தங்கு தடையில்லாத கருத்து வெள்ளம்

தந்தவனே கலைஞ நீ என்றும் வாழி

விண்ணகத்தில் தமிழ் வளர்க்க

விரைந்தாயோ நீ

மண்ணகத்தில் தமிழ்காக்க

மீண்டும் வா வா

உன்னை நம்பிக் காத்திருக்கும் எங்களுக்கு

உணர்வூட்ட எழுந்தருள வேண்டும் அய்யா!

பேராசியரியர்,புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்,
வேப்பங்குளம்,
சிவகங்கை மாவட்டம்