கள்ளழகர் வைகையாற்றில் இறங்க அனுமதி இல்லை :உயர்நீதிமன்றம்..

தமிழகத்தில் மிகப் பெரிய திருவிழா என்றால் அது மதுரை சித்திரைத் திருவிழாதான்.

சைவமும்,வைணவமும் இணைந்து நடைபெறும் விழா சித்திரை திருவிழா பல லட்சம் மக்கள் ஒன்று கூடும் இத்திருவிழாவால் மதுரை நகரே விழாக் கோலமாக காட்சியளிக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல் 15 நாட்கள் அதாவது திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றுத் திருத்தேரோட்டம் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து அழகர் மலையிலிருந்து கள்ளழகராக மதுரை நோக்கி தங்க குதிரை வாகனத்தில் வருவார்.

அவரை மதுரை மக்கள் தல்லாகுளத்தில் எதிர் சேவை செய்து வரவேற்பர். மறு நாள் காலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறும்.

அன்றிரவு வண்டியூர் சென்று மனவாளமாமுனிகளுக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அடுத்த நாள் கருட வாகனத்தில் வந்து ராமராயர் மண்டபத்தில் தசவதார அவதாரங்களில் விடிய விடிய காட்சியளித்து மதுரை மக்களிடம் பிரியாவிடைபெற்று அழகர் கோயில் திருப்புகிறார்.
கடந்தாண்டு கரோனா தொற்றால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறவில்லை. இந்தாண்டும் கரோனா தொற்றின் 2-ஆம் அலை வேகமெடுப்பதால் தமிழ அரசு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்கு அனுமதி மறுத்தது.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விழாவிற்கு அனுமதியளிக்க மறுத்து விட்டது.

மேலும் கரோனா பரவல் அதிகரித்துவருவதால் கட்டுப்பாடுகள் அதிகரி்க்கப்படலாம். எனவே நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.