காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா : வெகு விமர்சையாக தொடங்கியது…

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் குளத்திலிருந்து அத்திவரதரை வெளியில் எடுத்து 48 நாட்கள் மக்கள் தரிசனம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 17 வரை 48 நாட்களுக்கு நின்றகோலத்தில் அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

இன்று முதல் அத்திவரதர் 48 நாட்களுக்கு பொதுமக்களுக்கு தரிசனம் அளிக்கிறார் .காலை முதலே பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனை நேரில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு காவல்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒளிமுகம்பேட்டை, செவிலிமேடு, பெரியார் நகர் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரில் இருந்து வாகனங்களில் வருபவர்கள்,

தங்களது வாகனங்களை தற்காலிக பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து மினி பேருந்தில் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்பவர்கள் பெருமாள் கோவில் கிழக்கு கோபுரம் அருகே இறக்கிவிடப்படுவர்.

அங்கிருந்து வரிசையில் நின்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் அத்திவரதரை தரிசிக்கலாம். பின்னர் அங்கிருந்து ராஜகோபுரம் வழியாக வெளியே செல்லலாம்.

சுகாதாரத்துறை சார்பில் கோவில் உட்பிரகாரம், தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக 24 மணி நேர மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை முதல் ராஜகோபுரம் அருகே இலவச மற்றும் 50 ரூபாய் தரிசன சீட்டுகள் வழங்கப்படும் என்றும் 500 ரூபாய் சிறப்பு தரிசன சீட்டுகளை 4ஆம் தேதி முதல் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 இலவச வீல் சேர்களும் முதியவர்களுக்கு 10 அமரக்கூடிய 5 பேட்டரி கார்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வரிசையில் நின்று தரிசனம் செய்பவர்களுக்காக 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய பகுதிகளில் 100 இலவச கழிவறைகள், 70 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 7 இடங்களில் 24 மணி நேர தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமாணி தலைமையில் காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.