கவியரசர் கண்ணதாசனுக்கு 93 வது பிறந்தநாள் இன்று ..

கவியரசர் கண்ணதாசனுக்கு இன்று 93 வது பிறந்தநாள். அரை நூற்றாண்டை கடந்தும் அவருடைய பாடல்கள் இன்றும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி கண்ணதாசன்.

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்து வளர்ந்த கண்ணதாசன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதிலும், எழுத்தின்மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் எழுதவும், சினிமாவில் நடிக்கவும் விரும்பிய அவர், 16 வயதில் சென்னைக்கு வந்தார்.

பத்திரிகைகளில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதி வந்த கண்ணதாசனுக்கு திரைத்துறையில் பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 1955ல் வெளியான கள்வனின் காதலியில் முதல் வாய்ப்பு கிடைத்தது.

30 ஆண்டுகள் திரைத்துறையில் கோலோச்சிய கண்ணதாசன், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அந்தக்கால நடிகர்-நடிகைகளுக்காக எழுதிய எண்ணற்ற பாடல்கள் இன்றும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கின்றன.

இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் யாராக இருந்தாலும் கண்ணதாசனின் கவித்துவத்தின் வளமை ஒருபோதும் குறைந்ததில்லை. தாலாட்டாக, துயரங்களுக்கு ஆறுதலாக, தொய்ந்துபோன மனங்களுக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள்.

கண்ணதாசனின் எழுத்தில் உருவான பாடல்கள் ரஜினி,கமல் ஆகியோரின் படங்களுக்கு மெருகேற்றின.

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று எழுதிய கண்ணதாசன், தமது பாடல்களால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்…