என் மீது ‘ஆதாரமற்ற’ புகார்களைக் கூறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை: எம்.ஜே.அக்பர் எச்சரிக்கை

தன் மீது ‘ஆதாரமற்ற’ பாலியல் புகார்களைக் கூறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே.அக்பர் எச்சரித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகபத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும்,துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை # மீடூ ஹேஸ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டுவருகின்றனர்.

அந்தவகையில், மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது இதுவரை பெண் பத்திரிகையாளர்கள் 6 பேர் பாலியல் புகார்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதில் அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப், மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி உள்ளிட்ட பலர் குற்றச்சாட்டு கூறினார்கள்.

மத்திய அமைச்சர் அக்பர் ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டு இருந்ததால் அவரால் இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான பதிலும், விளக்கமும் அளிக்க முடியவில்லை.

மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இதகுறித்து கேட்டபோது எந்த பதிலும் தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும், பாஜக அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

அதேசமயம், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அளித்த பேட்டியில் சமூக வலைதளங்களில் வந்த குற்றச்சாட்டை அப்படியே நம்பிவிட முடியாது. அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏ.என்.ஐ.க்கு அவர் அளித்த விரிவான அறிக்கையில், “சில பிரிவினரிடையே ஆதாரங்கள் எதுவும் இல்லாது குற்றம்சாட்டுவது வைரஸ் காய்ச்சலாகப் பரவி வருகிறது.

என்ன புகாராக இருந்தாலும்., நான் இப்போது திரும்பி வந்து விட்டேன், என்னுடைய வழக்கறிஞர்கள் என் மீதான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கையாள்வார்கள். இதன் பிறகு எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.

ஏன் இந்தப் புயல் 2019 பொதுத்தேர்தல் நெருங்கும் வேளையில் உருவானது? ஏதாவது உள்நோக்கம் உள்ளதா? நீங்களே தீர்ப்பளியுங்கள். இத்தகைய தவறான, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்னைப்பற்றிய நல்லெண்ணம் மற்றும் மரியாதைக்கு ஈடு செய்ய முடியாத அவப்பெயரை ஏற்படுத்தித் தந்துள்ளது.

பொய்களுக்குக் கால்கள் இல்லை ஆனால் அதில் விஷத்தன்மை உண்டு. இது மிகவும் கவலையளிக்கக் கூடியது. நான் முறையான சட்ட நடவடிக்கை எடுப்பேன்.

ஓர் ஆண்டுக்கு முன்னதாக பத்திரிகையாளர் பிரியாமணி ஒரு இதழில் கட்டுரை மூலம் இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால் அவர் என்பெயரைக் குறிப்பிடவில்லை,

காரணம் அவருக்குத் தெரியும் அது சரியில்லாத ஒரு செய்தி என்று. சமீபத்தில் என்னை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டதற்கு அவர் அளித்த ட்வீட் பதிலில், ‘அவர் பெயரைக் குறிப்பிடவில்லை, காரணம் அவர் எதுவும் செய்யவில்லை’ என்று கூறியிருக்கிறார்.

நான் எதுவும் செய்யவில்லை என்றால் இவையெல்லாம் எங்கிருந்து முளைத்தன? இதில் செய்தியே இல்லை, எல்லாமே மறைமுகக் குத்தல் பேச்சு, ஊகம், நடக்காத ஒன்றைச் சுற்றி வசைமாரி பின்னப்படுகிறது.

இதில் சில நிரூபணமே இல்லாத வெறும் வதந்தியே. மற்றவர்கள் நான் எதுவும் செய்யவில்லை என்பதை பதிவு செய்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று மாலை சந்திக்கிறார் எம்.ஜே.அக்பர்.