எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்காதது ஏன்?:  ஸ்டாலின் விளக்கம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசியல் லாபத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் நடத்தப்படுவதால் அதில் பங்கேற்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிக்கிறேன். இந்த விழாவில் நான் பங்கேற்க வேண்டும் எனத் தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்தும் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் தமிழகத்தின் பல பகுதிகளிலும், நடத்தப்பட்ட நூற்றாண்டு விழாக்களில் எம்.ஜி.ஆர் புகழை கூறுவதை விடுத்து எதிர்க்கட்சியான தி.மு.க குறித்தும் எம்.ஜி.ஆருடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டிய கலைஞர் மற்றும் அவரின் உடன்பிறப்புகளையும் முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் விமர்சித்ததை மக்கள் அறிவார்கள். இவர்களின் இந்த நாகரிகக் குறைவான அணுகுமுறையைத் தம்பிதுரைக்கு நினைவூட்டிட விரும்புகிறேன். தற்போது கலைஞர் – எம்.ஜி.ஆர் நட்பை நினைவூட்டும் தம்பிதுரை, 2016 ஜனவரியிலேயே முறைப்படி தொடங்கப்பட்டிருக்க வேண்டிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரிடம் நினைவூட்டியிருக்கலாம்.

தற்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் பயணத்துக்காக மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமான முறையில் – உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பொதுமக்களுக்கு இடையூறாக நடத்தப்படும் விழா என்பதால், அதன் பின்னணியையும், உள்நோக்கத்தையும் புரிந்து கொண்டு, நான் அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும் லாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் எனக்கு உடன்பாடில்லை. எம்.ஜி.ஆர் என் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர். கழக நாடகங்களில் நான் பங்கேற்றபோது தலைமையேற்றுச் சிறப்பித்தவர். அதை நினைவுகூர்ந்து, முரசொலியில் “உங்களில் ஒருவன்” பகுதியில் அவர் குறித்து எழுதியிருக்கிறேன். அரசு சார்பிலான எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மலருக்கும் என்னுடைய கட்டுரையைத் தந்திருக்கிறேன். எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர் என்பதைப் பல பொது அரங்குகளிலேயே சொல்லியிருக்கிறேன். அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டது கலைஞர் – எம்.ஜி.ஆர் நட்பு. அதை அரசியலாக்காமல் நாளையாவது எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக அவரது நூற்றாண்டைக் கொண்டாட அரசினரை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

M.K. Stalin Explain’s Statement about skip the MGR Function