முக்கிய செய்திகள்

பட்டையைக் கிளப்பிய ஸ்டாலின்… பதறித் திணறும் எடப்பாடி தரப்பு?

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக களமிறங்காவிட்டால், நிவாரணப் பணிகள் இந்த அளவுக்கு சூடுபிடித்திருக்காது என்பதே டெல்டா பகுதி மக்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.

 

கஜா புயல் தாக்கி டெல்டாவே நிலைகுலைந்த போது அடுத்தடுத்து மு.க.ஸ்டாலின் செய்த அதிரடிதான் இன்றைக்கு அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதப் பொருளாகியிருக்கிறது. புயல் தாக்கியவுடனே வெளியான அறிக்கையில் ‘அரசின் முன்னேற்பாடுகள் திருப்தியளிக்கின்றன’ என்று ஒரு வாக்கியத்தைச் சேர்த்து ஆளும் தரப்புக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தார்.  ‘ஸ்டாலினே பாராட்டிட்டாரு’ என்றுதான் ஆளும்தரப்பு நினைத்தது. நடுநிலையாளர்களும் ‘இது ஸ்டாலின்  முன்னெடுக்கும் அரசியல் நாகரிகம்’ என்று பாராட்டுப்பத்திரம் வாசித்தார்கள். அதே நிலைப்பாட்டைத் தொடரும் மனநிலையில்தான் ஸ்டாலின் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் நிலைமை படுவேகமாக மாறியது.

 

முகாம்களில் இருந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதிலும் மறு சீரமைப்பு வேலைகளில் அரசு காட்டிய மெத்தனமும், அமைச்சர்கள் உண்மை நிலவரங்களை மறைத்து மழுப்பியது போன்ற செயல்களும் ஆளுங்கட்சியினர் மீது மக்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. அடுத்த நாளே ஸ்டாலின் டெல்டாவில் களத்தில் இறங்கினார். அதுவரை எந்த அரசியல் கட்சியினரும் களமிறங்காத சூழலில் ஸ்டாலின் சென்றவுடன் அந்தப் பகுதி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே சமயம் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஆளும் தரப்பு மக்களால் விரட்டியடிக்கப்பட்டது. போதாக்குறைக்கு சேலத்தில் மாமனார் வீட்டில் விருந்தில் இருந்த முதல்வரையும் ஸ்டாலின் ஒரு பிடி பிடிக்கத் தவறவில்லை. இதையெல்லாம் எடப்பாடி அரசு பதைபதைப்புடனே எதிர்கொண்டது.

 

ஸ்டாலினின் இந்த அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்தான் ‘திமுக கஜா புயலை அரசியலாக்குகிறது’ என்று உளவுத்துறையின் மூலமாக செய்தி பரப்பப்பட்டது. ஆனால் அது  மக்களிடையே பெரிய அளவில் எடுபடவில்லை. மாநிலம் முழுவதும் பொருட்களைச் சேகரிப்பதும் அதை திருச்சிக்கு அனுப்புவதும் என திமுக தரப்பு பம்பரமாகச் சுழன்றது.  இது பரவலாக செய்தியாகி பேசு பொருளானது.

 

‘ஆளும் தரப்பின் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்’ என்ற செய்தி எடப்பாடியை பயமூட்டியது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பயந்து ஓடியது போன்ற சூழல் முதல்வருக்கு வந்தால் அசிங்கமாகிவிடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை மணியடித்தது. அதனால்தான் ஹெலிக்காப்டரில் ஒரு சுற்று சுற்றிவிட்டு மழையைக் காரணம் காட்டி சென்னை திரும்பிவிட்டார் முதலமைச்சர்.

 

இரண்டாவது சுற்றாக அடுத்த நாளே ஸ்டாலின் கிளம்பிச் சென்று திருச்சி அறிவாலயத்திலிருந்து சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான லாரி பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். அதுவரைக்கும் அரசு எந்திரமே போகாத இடங்களுக்கெல்லாம் சுற்றியடித்து அடையாளம் காட்டியிருக்கிறார்.  இதெல்லாம் அரசு தரப்பை பதறச் செய்தது. அதைத்தான் மக்களும் பேசினார்கள். ‘ஸ்டாலின் இதையெல்லாம் செய்யலைன்னா நம்மை கண்டுக்காம விட்டிருப்பாங்க’என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது என்கிறார்கள் அந்தப் பகுதி பத்திரிக்கையாளர்கள். தம்மைக் கடந்த பத்து நாட்களாக விரட்டியடிக்கும் ஸ்டாலின் பற்றி ‘என்னய்யா இந்த ஆளு இப்படிக் குடைச்சல் கொடுக்கிறாரு’ என்று எடப்பாடி தமது நெருங்கிய சகாக்களிடம் புலம்பியதாகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் சமாளிக்கத்தான் எடப்பாடி இரண்டாம் கட்டமாக தொடரூர்தியில் பயணிக்கிறாராம். மக்கள் சீறிவிடாமல் இருக்க ஏகபப்ட்ட பந்தோபஸ்துகளைச் செய்து கொண்டிருக்கிறது உளவுத்துறையும் காவல்துறையும். அடுத்து ஸ்டாலின் என்ன அஸ்திரத்தை எடுப்பார் என்பதையும் தெரியாமல் ஏக டென்ஷனில் இருக்கிறது ஆளும் வட்டாரம்.

 

எதிர்கட்சி பட்டையைக் கிளப்புகிறது என்பதுதான் டெல்டா பகுதி பத்திரிக்கையாளர்களின் பேச்சாக இருக்கிறது.

  • சமூகவலைத்தளப் பதிவில் இருந்து…