ஊடகத்தின் குரல் நெரிக்கப்படுகிறது பத்திரிகையாளர் கொலைக்கு மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, மாயாவதி கடும் கண்டனம்..

உத்திரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டது, நாட்டில் அச்சுறுத்தும் சூழல் நிலவுவதைக் காட்டுகிறது. ஊடகத்தின் குரல் ஒடுக்கப்படுகிறது, ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஜியாபாத் விஜயநகரா பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் ஜோஷி. இவர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 16-ம் தேதி தன்னுடைய மருமகளைச் சிலர் கிண்டல் செய்தது தொடர்பாக விக்ரம் ஜோஷி போலீஸில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பைக்கில் தனது இரு மகள்களுடன் விக்ரம் ஜோஷி வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென 10 பேர் கொண்ட கும்பல், சாலையில் அவரின் பைக்கை மறித்து, அவரைக் கீழே தள்ளித் தாக்கியது. அவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து அந்தக் கும்பல் தப்பிவிட்டது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
தனது தந்தையை சிலர் தாக்கியபோது, காப்பாற்ற முடியாமல் இரு மகள்களும் பயந்து ஓரமாக ஒளிந்தனர். விக்ரம் ஜோஷி துப்பாக்கியால் சுடப்பட்டு சாலையில் கிடந்தபோது, அவரைக் காப்பாற்ற அவரின் இரு மகள்களும் உதவிக்காக பலரிடம் முறையிடும் காட்சியும் கேமராவில் பதிவானது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விக்ரம் ஜோஷி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அச்சமில்லாமல் துணிச்சலுடன் பணியாற்றி, உயிரிழந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தன்னுடைய மருமகளை ஒருவர் கிண்டல் செய்ததற்காகப் புகார் கொடுத்தமைக்காக விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நாட்டில் அச்சமான சூழல் உருவாகியுள்ளது. ஊடகத்தின் குரல் நெரிக்கப்படுகிறது. ஊடகமும் தப்பவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி அவரின் உறவினர் ஒருவரைக் கிண்டல் செய்த நபர்கள் மீது புகார் செய்ததற்காக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ராம ராஜ்ஜியத்துக்கு வாக்குறுதியளித்துவிட்டு, குண்டர்கள் ஆட்சிதான் நடக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ட்விட்ரில் பத்திரிகையாளர் குறித்துப் பதிவிடாமல் பொதுவாக உ.பியில் அதிகரித்துவரும் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “கொடூரமான குற்றங்களான கொலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடையின்றி நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு ஆட்சியில்லை, காட்டாட்சிதான் உ.பி.யில் நடக்கிறது என்பது தெளிவாகிறது. கரோனா வைரஸைக் காட்டிலும் கிரிமினல் வைரஸ்தான் தீவிரமாக இருக்கிறது” என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.