முக்கிய செய்திகள்

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….


தென் மேற்கு பருவமழை கர்நாடகம்,கேரளாவில் தற்போது கொட்டிதீர்த்து வருகிறது.கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 81,284 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று 114.63 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.98 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக சிறிது நேரத்திலேயே அணையின் நீர்மட்டம் 118 அடியை கடந்தது.

மொத்த கொள்ளளவான 120 அடி நீர்மட்டத்தை இன்று மாலைக்குள் எட்டும் நிலையில் உள்ளதால், அணையில் இருந்து திறக்கப்படும் நீர்ன் அளவு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது பாசனத்திற்காக விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.

காவிரியில் நீர்திறப்பு : கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 81,284 கனஅடி நீர்திறக்கப்பட்டு வருகிறது.

கபினி அணையில் இருந்து 33,333 கனஅடி நீரும், கேஆர்எஸ் அணையில் இருந்து 47,951 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.