முக்கிய செய்திகள்

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி..

நாக்பூரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4ஆம் நாளான இன்று 21 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இலங்கை ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 384 ரன்கள் பின் தங்கிஇருந்தது. நாளின் 7வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா தனது சுழலில் கருணரத்னேவை பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்த சில ஓவர்களில் உமேஷ் யாதவ் திரிமண்ணே விக்கெட்டை எடுத்தார். 4 ஓவர்கள் கழித்து ஏஞ்சலோ மாத்யூஸ் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நேற்று ஒரு விக்கெட் எடுத்திருந்த இஷான் சர்மா, இன்று டிக்வெல்லாவின் விக்கெட்டுடன் தனது கணக்கை துவங்கினார். தொடர் விக்கெட்டுகள் விழுவதைப் பார்த்து மறுமுனையில் களத்தில் இருந்த இலங்கை வீரர் ஷனகா அதிரடியாக ரன் சேர்த்து இந்திய அணிக்கு அழுத்தம் தர முயற்சித்தார்.

அஸ்வினின் ஓவரில் 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் வர, இவர் அதிரடிக்கு துணையாக சந்திமாலும் இஷாந்த் சர்மா வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து பெற்றார். ஆனால் இந்த 2 ஓவர்களை தாண்டி இவர்களது அதிரடி நீடிக்கவில்லை. ஷனகாவின் விக்கெட்டை அடுத்த ஓவரிலேயே அஸ்வின் எடுத்தார்.

தொடர்ந்து ஜடேஜா ஒரு மெய்டென் ஓவரை வீச, தனது ஸ்பெல்லை தொடர்ந்த அஸ்வின் பெரேரா, ஹெராத் என ஒரே ஓவரில் இரண்டு இலங்கை வீரர்களை ஆட்டமிழத்தனர்.

பின் சந்திமலுடன் இணைந்த லக்மல் உணவு இடைவேளை வரை தனது அணிக்கு விக்கெட் இழப்பின்றி பார்த்துக் கொண்டார். சந்திமல் 65 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார்.

61 ரன் எடுத்திருந்த சந்திமல் யாதவ் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த காமெஜ் ஒரு சில ஓவர் தாக்குப்பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் ஆஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இந்திய இன்னிங்க்ஸ் வெற்றியை பெற்றது.
கடைசி வரை களத்தில் லக்மல் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக இஷாத் ஷர்மா 5விக்கெட்டுகளையும், அஷ்வின், யாதவ் தலா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.