மோடி அருகே அமைச்சர்களைக் கூட அண்டவிடக் கூடாது: புதிய பாதுகாப்பு கெடுபிடி

பிரதமர் மோடியின் உயிருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து, உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அமைச்சர்களாகவே இருந்தாலும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் அனுமதிக்குப் பின்னரே அவர்களை பிரதமருக்கு அருகில் செல்ல விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ராஜீவ்காந்தி பாணியில் பிரதமர் மோடியையும் கொல்லத் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் பரிமாறப்பட்ட கடிதம் சிக்கியிருப்பதாக புனே காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள தலைவராக பிரதமர் மோடி கருதப்பட்டு வருகிறார். பிரதமரின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,   தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை அமைச்சக செயலாளர் ராஜிவ் குப்தா, தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ராஜீவ் கவ்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து, பிரதமரின் நெருக்கமான பாதுகாப்பு குழு (close protection team – CPT) பிரதமர் பாதுகாப்பு தொடர்பான புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. 2019 பொதுத்தேர்தல் நெருங்குவதால் பாஜகவின் பிரதான பிரச்சாரகரான பிரதமர் மோடியின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சாலையில் பிரதமர் பேரணியாக செல்வதைத் தடுக்க வேண்டும் என எச்சரித்துள்ள அந்த அமைப்பு, அமைச்சர்களைக் கூட, சிறப்புப் பாதுகாப்புக் குழு அனுமதித்தால் மட்டுமே பிரதமரிடம் நெருங்க விட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு பெருமளவு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.