நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் விடுவிப்பு…


நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நைஜீரியாவின் யோபே மாகாணத்தில் உள்ள டாப்ச்சி பகுதியில் அரசு மகளிர் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

இங்கு போகோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் மாணவிகள், பேராசிரியைகள் பலர் காயமடைந்தனர். மேலும் இந்தத் தாக்குதலுக்கு பிறகு கல்லூரியில் பயிலும் சுமார் 110 மாணவிகள் மாயமாகி இருப்பதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது கடத்தப்பட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நைஜீரியா அரசு தரப்பில், “தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளில் 104 பேர் நைஜீரியாவில் டாப்ஜி நகரில் விடுவிக்கப்பட்டனர்” என்று கூறப்படுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு போர்னோ மாநிலத்தில் பள்ளி ஒன்றில் கடத்தப்பட்ட சில மாணவியர் இன்னும் தீவரவாதிகளின் பிடியில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.