முக்கிய செய்திகள்

நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி…


தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தொடங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இத்திட்டத்தை செயல்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நியூட்ரினோ திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளதை ஏற்று, இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், விலங்குகள் நலவாரியம் ஆகியவற்றிடம் முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு, தீவிபத்து உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தொடர்பான அனுமதிகளையும் இந்தத் திட்டத்திற்கு பெற வேண்டும் என அமைச்சகம் நிபந்தனை விதித்துள்ளது. திட்டத்திற்கு முல்லைப் பெரியாறில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஆனால் 340 கிலோ லிட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு, பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளூர் நிர்வாகத்தின் அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிபந்தனை விதித்துள்ளது.