முக்கிய செய்திகள்

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு பதிலடி கொடுக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

மக்களை குழப்பும் வகையில் அவதூறு பரப்பும் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு பதிலடி கொடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 45வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளையும் முதலமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தொடர்ந்து 4 ஆண்டுகளாக உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார்.

அந்நிய செலவாணி வருவாயை அதிகரிக்கும் வகையில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

தமிழக அரசு பல்வேறு சாதனைகளையும், விருதுகளையும் பெற்று வரும் நிலையில் ஒருசிலர் அரசைப் பற்றி வேண்டுமென்றே மக்கள் மத்தியில் அவதூறு பரப்பி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உலக தரம் வாய்ந்த சிகிச்சைகள் தமிழகத்தில் கிடைப்பதால் மருத்துவ சுற்றுலாவில் முன்னிலையில் உள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.

இதில் தமிழக அமைச்சர்கள், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், அரசு உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தன.

அரசு திட்டங்களின் பயன்பாடு குறித்து அறியும் வகையில் பொருட்காட்சியில் சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 33 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

70 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 52 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. பெரியவர்களுக்கு 35 ரூபாய், சிறியவர்களுக்கு 20 ரூபாய் அனுமதி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.