பழனி முருகன் கோவில் ஐம்பொன் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு : முத்தையா கைது..

பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க சிலை செய்ததில் மோசடி நடந்ததை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் சிலை செய்யும் நிபுணர் முத்தையா ஸ்தபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பழனி கோவில் சிலை முறைகேட்டு புகாரில் சிக்கி முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பழனியில் சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்ட நவபாஷான மூலவர் சிலை உள்ளது. இதிலிருந்து நவபாஷானத்தை சுரண்டி ஒரு கும்பல் சேதப்படுத்தியது. இதனால் நவபாஷான சிலையை கர்ப்பகிரகத்தில் இருந்து அகற்றிவிட்டு ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து, அதுக்கு பதிலாக 200 கிலோ எடையில் புதிய ஐம்பொன் சிலை செய்து, மூலஸ்தானத்தில் வைக்க திட்டமிடப்பட்டது

ஆனால் இந்த சிலை செய்ததில் மோசடி நடந்ததை 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிச்சத்துக்குக் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து, பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், தலைமை ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.