உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு திமுக காரணம் அல்ல : மு.க.ஸ்டாலின்..


தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருப்பதால், காவிரி விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்கப் போவதில்லை என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

அப்போது, “உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் நிறைவேற்றவில்லை. அதனால்தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. தேர்தலை நடத்துவதற்கான எண்ணம் துளிகூட தமிழக அரசுக்கு இல்லை.

ஆனால், திமுகதான் உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு காரணம் என தமிழக அரசு வீண்பழி சுமத்துகிறது. அதில் உண்மை இல்லை. அதனால், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியைக்கூட பெற முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் திமுக மண்டல மாநாட்டில் தலைவர் கருணாநிதி கலந்துகொள்வதற்கான வாய்ப்பில்லை. மண்டல மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை தீர்மானங்களாக நிறைவேற்றுவோம்.

காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமரை சந்திக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதேபோல், சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் பிரதமரை சந்திக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். ஆனால், தற்போதுவரை அதற்கு அனுமதி தரப்படவில்லை.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை காவிரி விவகாரத்தை நான் எழுப்பியபோது, வரும் 29-ம் தேதி வரை பொறுத்திருங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குதிரை பேர அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருக்கிறது. அதனால், பிரதமரை சந்திக்க நிச்சயம் நேரம் கிடைக்கப்போவதில்லை.

கமிஷன், ஊழல் ஆகியவற்றைதான் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது. மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் தமிழக அரசு கவலைப்படவில்லை”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.