பெரம்பலூர் அருகே அதிமுக பிரமுகர் நடத்தி வந்த போலி மது ஆலை..

பெரம்பலூர் அருகே அதிமுக பிரமுகர் நடத்தி வந்த போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் அருகே கல்பாடி பிரிவு என்ற இடத்தில் போலி மதுபான ஆலை செயல்படுவதாக திருச்சி மண்டல மதுவிலக்கு சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதிமுக பிரமுகர் அசோகன் என்பவர், தனக்குச் சொந்தமான AKN தங்கும் விடுதியின் பின்புறம் உள்ள கட்டிடத்தில்,

போலி மது தயாரிப்பு கூடத்தை தனது மகனை வைத்து நடத்தி வருவதை கண்டறிந்து, அங்கு அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அங்கிருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள், ஸ்டிக்கர், மூடி உள்ளிட்டவற்றை கைப்பற்றிய திருச்சி மண்டல மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு போலீசார்,

அதிமுக பிரமுகர் அசோகனின் மகன் கார்த்திக்கேயன், காரைக்காலைச் சேர்ந்த உமாகாந்த், வினோத், நித்தியானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தூரத்தில், மேலும் ஒரு போலி மது தயாரிப்பு கூடத்தை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசார், பேரல்களில், ரசாயனம் கலக்கப்பட்ட எரிசாராயத்தை கைப்பற்றியதோடு, அந்த மது ஆலைக்கு சீல் வைத்தனர்.

போலி மதுபான ஆலைக்கு மூளையாக செயல்பட்ட காரைக்காலைச் சேர்ந்த நபரும், அதிமுக பிரமுகர் அசோகனும் தலைமறைவான நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.