ராஜீவ் காந்திக்கு பாரத் ரத்னா விருதை திரும்பப் பெறும் தீர்மானம்: எதிர்ப்பு தெரிவித்து பெண் எம்எல்ஏ ராஜினாமா…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அந்தக் கட்சி எம்எல்ஏ அல்கா லம்பா எதிர்ப்பு தெரிவித்து, தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் பேச்சு நடத்தப் போவதாக தெரிவிக்கப்படும் சூழலில் இந்தத் தீர்மானம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஜர்னைல் சிங் சீக்கியர்கள் படுகொலை தொடர்பான தீர்மானத்தை அவையில் கொண்டு வந்தார்.

அதில், சீக்கியர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி டெல்லி அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத வேண்டும்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

சீக்கியர் கலவரத்தை நியாயப்படுத்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய அம்சங்கள் கொண்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்தத் தீர்மானம் கொண்டு வந்ததற்கு ஆம் ஆத்மி கட்சியின் சாந்தினி சவுக் தொகுதி பெண் எம்எல்ஏ அல்கா லம்பா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தனக்கு கடும் நெருக்கடிகள் தரப்பட்டதாகவும் அதனால் சபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

இது குறித்து எம்எல்ஏ அல்கா லம்பா நேற்று இரவு கூறுகையில்,

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்

எனக்கு உடன்பாடில்லை. அதனால் நான் வெளிநடப்பு செய்தேன். எந்தவிதமான விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

என்னுடைய கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் என்னைத் தொலைபேசியில் அழைத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக் கோரினார்.

அதற்கு நான் ராஜினாமா செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளேன். நாளை எனது கடிதத்தை அளிப்பேன். நான் செய்த செயலுக்காக கட்சி அளிக்கும் தண்டனையை ஏற்கத் தயார்” எனத் தெரிவித்தார்.