முக்கிய செய்திகள்

அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலம்: ரவிசுப்ரமணியன்

உள்ளாழத்தில் புதைந்தபடி
சலிப்பும் பயமும் தோய்ந்த
உன் கவலைப் புலம்பல்களுக்கு 
சதா காதுகொடுத்து
நானும் துயருருவேன்

அபூர்வமாய் நேற்று அனுப்பிய
குதூகலத்தை
பொதுவில் பதிவிட்டேன்

விருப்பக்குறிகளாலும்
பின்னூட்டங்களாலும்
நிறைந்து கிடக்கிறது
காலக்கோடு

வாழ்த்து பலூன்கள்
பறக்கின்றன
பகிர்வுகள் தொடர்கின்றன

கழிவிரக்கத்தின் குழிகளில்
தேனை நிரப்பிக்கொள்

செறுமல்கள் மீது
மலர்ச்சரங்களைச் சூடிக்கொள்

உற்சாகக் குரல்களை
பிடித்த ராகங்களாய் மாற்றிக்கொள்

பிடிமானத்துக்கும்
சந்தோஷத்துக்கும்
எவ்வளவு உள்ளது பார்

அற்புதங்கள் எல்லாம்
பென்னம் பெரிய காரியங்களாலா
நிகழ்கின்றன அமிர்தா.

Ravisubramaniyan’s Poetry