தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு: ராகுல் குற்றச்சாட்டு…

தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், முஸ்லிம்களை இந்தியர்கள் பலர் மனிதர்களாகக்கூட கருதாதது வெட்கப்பட வேண்டிய உண்மை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உபி. அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.

உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரின் உடலுக்குப் பெற்றோர் இறுதிச்சடங்குகூட செய்யவிடாமல் போலீஸார் வலுக்கட்டாயமாக பெட்ரோல் ஊற்றித் தகனம் செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாகி பல்வேறு மாநிலங்களி்ல் போராட்டம் நடந்து வருகிறது.

ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் விருப்பத்தின்படிதான் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். ஆனால், போலீஸாரின் கூற்றைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மறுக்கின்றனர்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் இந்தச் சம்பவத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார். சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிபிஐ விசாரணைக்கும் ஏற்கப்பட்டுள்ளது.

ஆனால், ஹாத்ரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று முதல்வர் ஆதித்யநாத்தும், உ.பி. போலீஸாரும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ட்விட்டரில் உ.பி. அரசைக் கடுமையாகச் சாடி கருத்துப் பதிவிட்டுள்ளார். தன்னுடைய ட்வி்ட்டர் பக்கத்தில், ஹாத்ரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று தொடர்ந்து கூறியும் ஏன் போலீஸார் மறுக்கிறார்கள், காரணம் என்ன என்ற செய்தியையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.

ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள், முஸ்லிம்களை மனிதர்களாகக் கூட இந்தியர்கள் பலர் கருதவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை.

ஹாத்ரஸ் சம்பவத்தில் யாரும் பலாத்காரம் செய்யப்படவில்லை என உ.பி.முதல்வர் ஆதித்யநாத், மாநில போலீஸார் கூறுகின்றனர். ஏனென்றால், அவர்களுக்கும், பல இந்தியர்களுக்கும், பாதிக்கப்பட்ட பெண் யாரும் இல்லாதவர்தானே” எனத் தெரிவித்துள்ளார்.