முக்கிய செய்திகள்

செங்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்..

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீசி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கோட்டையில் ஓம்காளி விநாயகர் கமிட்டி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. செங்கோட்டையில் இருந்து மேலூருக்கு கீழ பள்ளிவாசல் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதையடுத்து தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் செங்கோட்டை தாசில்தார் வெங்கடாச்சலம் ஆகியோர் இருதரப்பினரிடையே பேசி சமாதானப்படுத்தினர்.

பின்னர் ஊர்வலம் புறப்பட்டபோது, போலீசார் மீது சிலர் கற்களை வீசி தாக்கியதாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். கல்வீச்சில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனகள், ஆட்டோக்கள் சேதமடைந்தன.

செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலைமை சமாளிக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.